இறுதி நிமிட கோலால் பார்சிலோனாவை தோற்கடித்தது ரியல் மெட்ரிட்
லாலிகா உதைப்பந்தாட்டத் தொடரின் ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா கழகங்களுக்கு இடையிலான எல் கிளாசியோ போட்டியில் இறுதி நிமிட கோலால் 3:2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் திறில் வெற்றி பெற்றது ரியல் மெட்ரிட் கழகம்.
உலகப் புகழ்பெற்ற கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்டத் தொடரின் முதன்மைத் தொடரான ஸ்பெய்னின் லாலிகா தொடரின் 32ஆவது வாரத்துக்கான போட்டியில் தரநிலையில் முதலிடத்திலுள்ள ரியல் மெட்ரிட் மற்றும் 2ஆம் நிலையிலுள்ள பார்சிலோனா ஆகிய இரு கழகங்களலும் சென்டியாகோ பெர்னாபி மைதானத்தில் மோதின. இவ்விரு கழகங்களும் மோதிக் கொள்ளும் போட்டி எல் கிளாசியோ என வர்ணிக்கப்படுகின்றது.
அந்தவகையில் ஆரம்பித்த போட்டியின் முதல் பாதியின் 6ஆவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர்கிரிஸ்டென்ஸன் தலையால் முட்டி பந்தை கம்பத்தினுள் அனுப்ப 1:0 என முன்னிலை பெற்றது பார்சிலோனா. பின்னர் ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் கழகத்திற்கு பெனால்டி வாய்ப்புக் கிடைக்க அதனை வினிசிவுஸ் ஜுனியர் கோலாக மாற்ற முதல் பாதி 1:1 என சமநிலை பெற்றது.
பின்னர் தொடர்ந்த தீர்மானமிக்க 2ஆவது பாதி ஆட்டத்தில் 69ஆவது நிமிடத்தில் பெர்மின் லோபஸ் அசத்தல் கோலை உள்ளனுப்ப 2:1 என ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது பார்சிலோனா. பின்னர் ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் லூகாஸ் வாஸ்குவோஸின் கோலினால் பதிலடி கொடுத்த ரியல் மெட்ரிட் போட்டியை மீண்டும் 2:2 என சமன் செய்தது. பின்னர் ஆட்டத்தின் மேலதீக நிமிடமான 91ஆவது நிமிடத்தில் ஜுடோ பெல்லிங்கம் அடித்த அசத்தல் கோலால் போட்டியின் முழுமையான நேரம் முடிவுக்கு வர 3:2 என வெற்றியைப் பதிவு செய்த ரியல் மெட்ரிட் முதலிடத்தில் நீடிக்கின்றது.
(அரபாத் பஹர்தீன்)