கட்டுரை

பத்ர் யுத்தம் இஸ்லாத்தின் ஆணிவேர்..! கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்

முஹம்மது நபி ( ஸல்) அவர்களுக்கு 40 வயதாகும் போது அல்லாஹ் இஸ்லாம் வேதத்தை அருளினான். அன்று முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் வளர்ந்து வந்தது. இதனை கண்டு சகிக்க முடியாத, பொறாமை மிகுந்த மக்கத்து காபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் அவரை பின்பற்றுவோருக்கும் சொல்லொணாத் துன்பங்களை இழைத்துக் கொண்டே இருந்தனர். இக்கொடுமைகளை தாங்க முடியாது நபி (ஸல்) அவர்களும் கூட்டத்தினரும் மக்காவை விட்டு மதீனா நகரிற்கு இடம்பெயர்ந்தனர். இது அரபியில் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுவதுடன் இஸ்லாமிய ஆண்டின் ஆரம்பமாகவும் கணிக்கப்படுகிறது.
மதீனாவிலும் இஸ்லாம் வேகமாக பரவியது. இதனால் நபி (ஸல்) அவர்களையும் அவரது கூட்டத்தினரையும் ஒழித்துக்கட்ட அபூ ஜஹில்; போர்தொடுக்கத் தயாரானான். 1000இற்கும் அதிகமான மக்கத்து காபிர்களை ஒன்று திரட்டினான். அபூ ஜஹில் 1000இற்கும் அதிகமான மக்கத்து காபிர்களுடன் 100குதிரைகள் ,கணக்கிலடங்கா ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன்; பத்ர் என்ற ஊரில் ஒன்று கூடினான். பத்ர் என்ற சிற்றூர் மக்காவிலிருந்து 343கிலோ மீற்றரும் மதீனாவிலிருந்து 153கிலோ மீற்றரும் ஆகும்.
அபூ ஜஹில் மக்கத்து காபிர்களுடன் படையெடுத்து வருவதை ஒற்றர் மூலம் அறிந்த நபி (ஸல்) அவர்களும் மதீனாவில் முஸ்லிம் படையை திரட்டினார். நபி (ஸல்) அவர்களின் படையில் முஹாஜிரீன்கள் 82 பேரும் அன்ஸாரீன்கள் 231 பேரும் ஆக மொத்தம் 313 பேர் பத்ர் யுத்தத்திற்கு தயாரானார்கள். நபி (ஸல்) படையில் 313 வீரர்களுடன் 02 குதிரைகளும், 70 ஒட்டகங்களுமே இருந்தன. முஸ்லிம்களின் சிறிய படையும் காபிர்களின் பெரும் படையும் களத்தில் மோத தயாராகின.
நபி (ஸல்) அவர்கள் தமது படையணியை பார்வையிட்ட போது முஆத் (ரலி), முஅவ்வித் (ரலி) ஆகிய அன்ஸாரீன் சிறுவர்களும் அணிவகுப்பில் இருப்பதை அவதானித்தார்கள். இருவரையும் யுத்தத்திற்கு செல்ல அனுமதி வழங்க விரும்பாமல் திரும்பிவிடும்படி பணித்தார்கள். நபி (ஸல்) அவதானிக்கும் போது இச்சிறுவர்கள் இருவரும் பெரியவர்கள் போன்று காட்டிக்கொள்வதற்காக குதிகால்களை உயர்த்தி, கால் விரல்களால் நின்று கொண்டிருந்தனர். நபி (ஸல்) அனுமதி மறுக்கவே தம்மால் போரிட முடியும் என்பதை காட்ட இருவரும் மல்யுத்தம் புரிந்து தம் வல்லமையை காட்டி போரில் ஈடுபட மன்றாடி கேட்டனர். இருவரதும் ஆர்வத்தை கண்டு அனுமதி வழங்கப்பட்டது. அப்றா பின்த் உபைத் (ரலி) என்ற பெண்மணி தனது ஏழு ஆண்பிள்ளைகளையும் யுத்தத்தில் கலந்து கொள்ள செய்தததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முஸ்லிம் படையும் காபிர்களின் படையும் பத்ர் எனும் இடத்தில் முகாமிட்டுக் கொண்டன. பத்ர் யுத்தமானது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதம், 17ஆம் நாள் நடைபெற்றது. அரபு நாட்டு யுத்த வழக்கின் படி தனியாளாக ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வாள் சண்டை யுத்தம் ஆரம்பிக்க முதல் நிகழும். இதற்கமைய அபூ ஜஹில் தனது படையில் இருந்து நன்கு தேர்ச்சி பெற்ற உத்பா, ஷைபா, வலீது ஆகிய மூன்று வீரர்களை இறக்கினான்.இவர்களுடன் ஒருவருக்கொருவர் தனித்தனிய வாள் சண்டையில் ஈடுபட முஸ்லிம் அணியிலிருந்து மூன்று அன்ஸாரீன் வீரர்கள் களம் இறங்கினர்.
ஆணவம் பிடித்த காபிர் வீரர்களோ தம்மோடு மோதுவதற்கு மக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பலம் பொருந்திய எமது உறவினர்களான,
துரோகிகளான மக்கத்து வீரர்களை களத்தில் இறக்க வேண்டுமென அடம் பிடித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி), ஹம்ஸா (ரலி), உபைதா (ரலி) ஆகிய மூவரையும் ஆரம்ப போர்க்களத்தில் இறங்கும்படி பணித்தார்கள். கணப்பொழுதிலே காபிர்கள் மூவரும் வெட்டி சாய்க்கப்பட்டனர். அலி (ரலி) அவர்கள் ஷைபாவையும், ஹம்ஸா(ரலி) உத்பாவையும், உபைதா (ரலி) வலீதுவையும் வாளால் வெட்டி சாய்த்தனர். மக்கத்து காபிர்களின் தலைவன் அபூ ஜஹில் சினம் கொண்டான். பின்னர் இரு படைகளும் மோதிக் கொண்டன.
எதிரும் புதிருமான அணிகளில் தந்தை மகனுடனும், அண்ணன் தம்பியுடனும், மாமன் மருமகனுடனும் சண்டையிடும் நிலையே பத்ர் போரில் நிலவியது. நபித் தோழர் அபூ உபைததுல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள்; முஷ்ரிக்கான தனது தந்தையை கொலை செய்து சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவராவார்.
வாலிபர்களான இருவர் அபூ ஜஹிலை தாக்கி எழுந்திருக்க முடியாதவாறு செய்தார்கள். பின்னர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நிலத்தில் விழுந்து கிடந்த அபூ ஜஹிலின் தாடியை பிடித்து ‘ நீதானா அபூ ஜஹில்! ‘ நபி (ஸல்) அவர்களை இம்சை படுத்திய சண்டாளன் என்று சொல்லி தலையை வேறாக வெட்டி எடுத்தார்.
இதனையடுத்து காபிர்களின் படை சின்னாபின்னமாகின. காபிர்கள் சிதறுண்டு புறமுதுகு காட்டி ஓடினர். காபிர்களின் பெரும் படை தோல்வி கண்டது. காபிர்களின் அணியில் 70 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் படையில் முஹாஜிரீன்கள் 06 பேரும் அன்ஸாரீன்கள் 08 பேரும் அடங்கலாக 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.
பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்ட காபிர்களின் படையில் குரைஷியர்களில் ஒரு பிரிவினரான பனூ ஹாஷிம் கோத்திரத்தினரை கொலை செய்ய வேண்டாம் என நபி (ஸல்) பணித்தார்கள். எனெனில் அவர்கள் யுத்தத்தை வெறுத்தவர்களாக அபூ ஜஹிலின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள் என்பதற்காக.
கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாக்கப்பட்டனர். வசதியில்லாதவர்கள் மதீனாவில் எழுதப்படிக்க தெரியாத சிறுவர்களுக்கு கல்வி போதிப்பதன் மூலம் விடுதலையாக்கப்பட்டனர்.
பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்கள் சிறிய கூட்டத்தினராக இருந்த போதிலும் பெரும் கூட்டத்தினரான காபிர்களுடன் மோதி வெற்றியடைந்தனர். பத்ர் யுத்தத்தில் அன்று முஸ்லிம்கள் வெற்றி பெறவில்லையென்றால், இஸ்லாமிய வரலாறே வேரோடு சாய்ந்திருக்கும். எனவே பத்ர் யுத்தமானது இஸ்லாத்தின் ஆணிவேராகும்.
முஸ்லிம்கள் சிறிய கூட்டத்தினராக இருந்த போதிலும் சத்தியத்தை நிலைநாட்டி ஈமானிய பலத்துடன் போராடியதால் வெற்றி பெற்றனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடியதற்கிணங்க வானவர்களும் வந்து முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டதும் வெற்றிக்கு காரணமாகியது.
பத்ர் யுத்தம் இரு படைகளுக்கும் நல்ல படிப்பினையோடு முஸ்லிம்களுக்கு வெற்றியாக அமைந்தது. பத்ர் யுத்த வெற்றியானது இஸ்லாம் மென்மேலும் மேலோங்க உந்து சக்தியாக அமைந்தது.

 

(கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *