முதல் ரி20 போட்டி, ஆப்கானுக்கு அதிர்ச்சி கொடுத்தது அயர்லாந்து
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் பென் வைட்டின் அசத்தலான சுழல் பந்து வீச்சினால் 38 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவருகின்றது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. பின்னர் இடம்பெற்ற ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2:0 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நேற்று சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது.
இப் போட்டியில் உபாதையிலிருந்து மீட்டுள்ள ரஷீட்கான் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடாத்தியிருந்தார். அதற்கமைய நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ரஷீட்கான் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெ;டர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரஷீட்கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் இலகுவான 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு முக்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தனர். இருப்பினும் பின்வரிசையில் வந்த மொஹமட் இஷ்ஸாக் 32, முஹம்மது நபி 25 ஓட்டங்கள் என ஆறுதல் கொடுத்த போதிலும் ஆப்கானிஸ்தான் அணியால் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.
இதனால் அயர்லாந்து அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. பந்துவச்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய பென் வைட்டின் போட்டியின் நாயகன் விருதை வென்றார்.
(அரபாத் பஹர்தீன்)