விளையாட்டு

பெத்தும் மற்றும் அசலங்கவின் இணைப்பாட்டத்தால் வங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்தது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தீர்க்கமான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் ஓட்ட இயந்திரம் பெத்தும் நிஷங்கவின் சதமும் , சரித் அசலங்கவின் அரைச்சதம் கடந்த ஓட்டக் குவிப்பின் உதவியுடன் 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 1:1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் தீர்க்கமான 2ஆவது போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக சிட்டகொங் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்கனவிற்கு பதிலாக துனித் வெல்லாலகேவை களமிறக்கியிருந்தது.

இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது. இதற்கமைய களம் நுழைந்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரரான லிட்டன் தாஸை 3ஆவது பந்தில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் டில்ஷான் மதுஷங்க. பின்னர் இணைந்த சௌமியா சர்கார் மற்றும் நஜமுல் ஹுசைன் சாண்டோ ஆகியோர் தமக்கிடையில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க சான்டோ 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.சற்று நேரத்தில் அரைச்சதம் கடந்திருந்த சௌமியா சர்கார் 68 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் சுழலில் வெளியேற, அதே ஓவரில் அனுபவமிக்க முஹம்மதுல்லாவை ஓட்டமின்றி வெளியேற்றினார்.

இடுத்து வந்த வீரர்கள் கொற்ப ஓட்டங்களுடன் வெளியேற களத்தில் நிலைத்திருந்த டவ்ஹீட் ஹிரிடோய் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் சவாலான 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்க களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்ணான்டோ டக்அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த அணித்தலைவரான குசல் மென்டிஸ் (16) , சதீர சமரவிக்ரம (0) என சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் களத்திலிருந்த ஆரம்ப வீரரான இலங்கையின் ஊட்ட இயந்திரம் பெத்தும் நிஷங்க 4ஆவது விக்கெட்டில் சரித் அசலங்கவுடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதுடன் தத்தமது இசை;சதங்களையும் கடந்ததனர். பின்னர் தனது 5ஆவது சதத்தை பதிவு செய்த பெத்தும் நிஷங்க 114 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பெறுமதிமிக்க 185 ஓட்ட இணைப்பாட்டம் தகர்ந்தது.

இருப்பினும் களத்திலிருந்த சரித் அசலங்க நிலைத்திருந்து 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க பின்னர் வந்த வனிந்து ஹசரங்க தன் பங்கிற்கு 25 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருக்க, வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 47.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 1:1 என சமன் செய்தது. பந்துவீச்சில் செரீபுல் மற்றும் டஸ்கின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இத் தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *