இலங்கையின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் ஆகீப் ஜாவெட் நியமனம்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகீப் ஜாவெட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளரான தர்ஷன கமஹே செயற்பட்டு வந்ததுடன் அவரன் ஒப்பந்தக் காலம் நிறைவுக்கு வந்திருந்துள்ளது. அதன் காரணமான இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரானஆகிப் ஜாவெட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்தின் நிறைவுவரை இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
51 வயதான முன்னாள் வேப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவெட் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்தியுள்ளார். அத்துடன் அவரின் ஒருநாள் சர்வதேச சிறந்த பந்துவீச்சுப் பிரதியான 37 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை பதிவாகியுள்ளது. அதுமாத்திரமின்றி 1992ம் ஆண்டு பாகிஸ்தான் உலகக்கிண்ணம் வெல்லும் போது குறித்த அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
மேலும் ஆகிப் ஜாவெட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அபிவிருத்திக்கான பொறுப்பொன்றிலும் பணியாற்றியுள்ளார். இவருடைய பயிற்றுவிப்பின் கீழ் 2004ம் ஆண்டு பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத்தை வென்றதுடன், 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சர்வதேச ரி20 உலகக்கிண்ணத்தை வென்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதியாக இவர் தற்போது இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ரி20 தொடரில் ஷஹீன் அப்ரீடி தலைமையிலான லாஹுர் கெலண்டர்ஸ் அணியின் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்ததுடன் இத் தொடரில் அவ்வணி ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.