அயர்லாந்தை சுழலில் சுருட்டிய ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை வெற்றி கொண்டது
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அனுபவமிக்க வீரரான முஹம்மது நபி மற்றும் அறிமுக வீரரான நங்கயாலியா கரோடியா ஆகியோரின் சுழலில் சிக்கிய அயர்லாந்து அணி 117 ஓட்டங்களால் தோற்றுப் போக 2:0 என தொடரை வெற்றி கொண்டது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஐக்கிய அரபு இராச்சியம் சென்று மூவகைத் தொடர்களில் பங்கேற்றுவருகின்றது. இதில் முதலில் நிறைவுற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று தமது முதல் சர்வதேச டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆரம்பித்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க இரண்டாவது போட்டி மழையால் முழுமையாகக் கழுவப்பட்டது. இதற்கமைய தொடரின் தீர்க்கமான 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாட்டிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது, துடுப்பாட்டத்தில் ஹஸ்மதுல்லாஹ் ஸஹீடி மற்றும் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்து முறையே 69 மற்றும் 51 ஓட்டங்களைப் பெற்றனர். மேலும் முஹம்மது நபி 48 ஓட்டங்களை தன்பங்கிற்குப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் மார்க் அடய்ர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் எட்டக்கூடிய 237 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த அயர்லாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான போல் ஸ்டெர்லிங் 50 ஓட்டங்களையும் , குர்டிஸ் சம்பர் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருக்க மற்றைய வீரர்களை முஹம்மது நபி மற்றும் நங்கயாலியா கரோடியா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் அனுப்பி வைக்க அயர்லாந்து அணி 35 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117ஓட்டங்களால் தோற்றுப் போனது. பந்துவீச்சில் அனுபவமிக்க வீரரான முஹம்மது நபி மற்றும் அறிமுக வீரரான நங்கயாலியா கரோடியா ஆகியோர் முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என கைப்பற்றியது ஆப்கானிஸஸ்தான் அணி. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)