களத்திலிருந்த நடுவர் நான். இறுதி முடிவும் என்னுடையது.. – நடுவர் ஹனிபால்
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3ஆவது ரி20 போட்டியின் நடுவராக இருந்த லியோனல் ஹனிபால் தன் மீது வனிந்து ஹசரங்க மற்றும் இலங்கை ரசிகர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தனது முகநூல் பதிவின் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 20ஆவது ஓவரின் 4ஆவது பந்து நேராக கமிந்து மென்டிஸின் இடுப்புப் பகுதிக்கும் மேலால் சென்றது. அதற்கு நடுவராக இருந்து ஹனிபால் நோ போல் இல்லை என அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டி நிறைவுற்றதன் பின்னர் ஊடக சந்திப்பில் பங்கேற்ற இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க ஹனிபால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக இருக்க தகுதி அற்றவர். அவர் வேறு ஏதும் வேலையினை செய்வது நல்லது என்றார். மேலும் இலங்கை ரசிகர்களும் நடுவரை திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் அக் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சொந்த முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“அப்போது களத்தில் இருந்த நடுவர் தான் என்றும், இறுதி முடிவு தன்னாலே என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)