கமிந்துவின் போராட்டம் வீண்..! ஆறுதல் வெற்றியுடன் இலங்கையிலிருந்து புறப்பட்டது ஆப்கான்..!
இலங்கை அணிக்கு எதிராக 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸின் அதிரடி கை கொடுக்க, கமிந்து மென்டிஸின் போராட்டம் வீண்போக 3 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியுடன் இலங்கையிலிருந்து புறப்பட்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியிருந்தது. இந்நிலையில் 3 ஆவதும் இறுதியுமான ரி20 போட்டி நேற்று (21) தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இரவு போட்டியாக இடம்பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய களம் புகுந்த ஆரம்ப வீரர்களான ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லாஹ் ஸஷாய் ஆகிய இருவரும் இலங்கைப் பந்துவீச்சாளர்களை வெளுத்துக் கட்டினர். இவ்விருவரும் தமக்கிடையில் 7.2 ஓவர்களில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க ஹஸ்ரதுல்லாஹ் ஸஷாய் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் தொடர்ந்து களத்திலிருந்து ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் அரைச்சதம் கடந்து 70 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார். மத்திய வரிசையில் வந்த அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் 31 ஓட்டங்களை தன் பங்கிற்கு அடித்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மதீஷ பத்திரன மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 210 என்ற இமாலய இலக்கினை நோக்கி பதிலளித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க அதிரடி ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் மற்றைய ஆரம்ப வீரரான குசல் மெண்டிஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த குசல் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றினார். நம்பிக்கை கொடுத்த பெத்தும் நிசங்க 60 ஓட்டங்களுடன் உபாதை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களான வனிந்து ஹசரங்க (13), சதீர (23) மற்றும் மெத்யூஸ் (4), தசுன் சானக (13) என சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் தனி ஆளாய் களத்திலிருந்து இலங்கையின் வெற்றிக்காய் போராடிய கமிந்து மென்டிஸ் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை விளாசிக் கொடுத்த போதிலும் இலங்கை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. இதனால் 3 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. பந்துவீச்சில் முஹம்மத் நபி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இப்போட்டியின் நாயகனாக ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸும், இத் தொடரின் நாயகனாக இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்கவும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)