விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் இலங்கை மைதானத்தில்..

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லெஜன்ட்ஸ் வெற்றிக் கிண்ண தொடரின் இவ்வருடத்திற்கான அத்தியாயம் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் விளையாடி துடுப்பாட்டம் பந்துவீச்சு ஆகிய துறைகளில் நட்சத்திரங்களாகத் திகழ்ந்து எண்ணிலடங்கா ரசிகர்களை தம் பக்கம் ஈர்த்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்து ஓய்வு பெற்ற வீரர்களை இணைத்து இத் தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. இத் தொடர் 90 பந்துகளைக் கொண்ட போட்டியாக இடம்பெறவுள்ளது. இதன் முதல் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றிருந்தது.

மேலும் நடப்பாண்டிற்கான தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இத் தொடர் தொடர்ந்து 14 நாட்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் தொடரில் இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் 7 அணிகளாகப் பிரிக்கபட்டு இத் தொடர் இடம்பெறவுள்ளது.

மேலும் பிரிக்கப்பட்டுள்ளன 7 அணிகளின் பெயர் விபரங்களையும் ஏற்பாட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதற்கமைய ராஜஸ்தான் கிங்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ், பஞ்சாப் ரோயல்ஸ், கண்டி வாரியர்ஸ், கொழும்பு லயன்ஸ், நியூயோர்க் சுப்பர் ஸ்டார் ஸ்ரைக்கர்ஸ் மற்றும் டுபாய் ஜயண்ஸ் ஆகிய பெயரில் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இத் தொடரில் இலங்கையின் சமிந்த வாஸ், திசர பெரேரா, டில்ஷான், சனத் ஜயசூரிய போன்றவர்களும் பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹீட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் போன்றவர்களும் , இந்திய அணியில் யுவராஜ் சிங், முஹம்மட் கைப், சுரேஷ் ரெய்னா போன்றோரும், கிரிஸ் கெய்ல், இம்ரான் தாஹிர் போன்ற நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்க உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இத் தொடருக்கான அணிகளின் சீருடை அறிமுகம் மற்றும் இப் போட்டி தொடர்பான விளக்க நிகழ்வு பர்வேஸ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *