பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா..
இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட்டினால் போராடி வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்று வரும் இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்று, சுப்பர் சிக்ஸ் சுற்று என அனைத்தும் நிறைவடைந்திருக்க கடந்த 6ஆம் திகதி முதல் அரையிறுதி போட்டி இடம்பெற்றிருந்தது. இதில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று விலோமூர் பார்க் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடக் களம் கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் 6 ஆவது விக்கெட்டில் இணைந்த அஸான் அவைஸ் மற்றும் அரபாத் மின்ஹாஸ் ஆகியோர் தத்தமது அரைச்சதங்களை பதிவு செய்து தலா 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க பின் வரிசை வீரர்களும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் இளையோர் அணி 48.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் டொம் ஸ்டக்கர் 6 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் சவாலான 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு ஹாரி டிக்சொன் 50 ஓட்டங்களையும் , ஒலிவர் பீக் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, இறுதியில் வந்த டொம் ச்சம்பெல் 25 ஓட்டங்களை விளாச 49.1ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று 1விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலிய இளையோர் அணி. பந்துவீச்சில் அலி ராஸா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இப் போட்டியில் பெற்ற திரில் வெற்றியின் மூலம் நடப்பாண்டில் இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 11ஆம் திகதி பினோனியில் இந்திய இளையோர் அணியை எதிர் கொள்கிறது அவுஸ்திரேலிய இளையோர் அணி
(அரபாத் பஹர்தீன்)