முஸ்லிம் விவாகப் பதிவாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட வேண்டும். அ .இ.விவாக பதிவாளர் சங்கத் தலைவர் துஷ்மந்த கருணாநாயக..
நாடளாவிய சமூக நலன் கருதி சேவை நோக்காகக் கொண்டு செயற்படும்
முஸ்லிம் விவாகப் பதிவாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வருடத்திற்கு 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் அளவில் திருமணங்கள் இலங்கையில் நடந்தேறுகின்றன. அதில் 60 ஆயிரம் திருமணங்கள்
ஹோட்டல்களிலும் மற்றும் வீடுகளிலும் பதிவாளர் அலுவலகங்களிலும்
நடைபெற்று வருகின்றன. விவாகப் பதிவாளர்கள் சமூக நலன்கருதி இந்தத்
திருமணங்களை நடத்தி வருகின்றனர் என்று அனைத்து இலங்கை பிறப்பு இறப்பு
விவாகப் பதிவாளர் சங்கத்தின் தலைவர் துஷ்மந்த கருணாநாயக தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் விவாகப் பதிவாளர் சங்கத்தின் பொதுக் கூட்டமானது சங்கத்தின் உப தலைவர் மௌலவி பஸ்லுர் ரஹ்மான் அவர்களின் வழிகாட்டலுடன் தலைவர் எம். ஜே. எம். சுஹைல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர் சங்கத்தின் தலைவர் துஷ்மந்த கருணாநாயக இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க்
எச். உமர்தீன் அவர்களின் விசேட மார்க்கச் சொற்பொழிவு இடம்பெற்றது.
சங்கத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். ரிஷாத், பொருளாளர் எம்.
குவாமி பாரூக் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களுடன் நாடளாவிய ரீதியில்
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய, வட மத்திய, சப்ரகமுவ சகல
மாகாணங்களிலும் விவாகப் பதிவாளர்களாக கடமையாற்றுகின்ற முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓய்வு பெற்ற கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த விவாகப் பதிவாளர்கள் 12 பேர் பாராட்டி கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்ட அகில இலங்கை
ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன்
உரையாற்றும் போது விவாகப் பதிவாளர்கள் சமூக நல நோக்குடனே கடமை புரிய வேண்டும் என்ற
நிலைமை காணப்படுகிறது. திருமண வீட்டார்களின் இல்லத்தில் இருந்து கிடைக்கப் பெறும் பணத்தில் இருந்து ஏதோ ஒரு வகையில் கடமை புரிந்து வருகின்றீர்கள்.விவாகப் பதிவாளர்களுடைய பணி உத்தமமானது; உயர்வானது; நேர்மையானது; கண்ணியமானது. இதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு
மிகவும் பெறுமதியான பணியை நீங்கள் சுமந்து சமூகத்திற்கு சேவை அடிப்படையில் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.
விவாகப் பதிவாளர்கள் என்பது தம்பதியினரைச் சேர்த்து வைப்பதாகும். சாட்சி இல்லாமல் திருமணம் நடத்த முடியாது. அந்த அடிப்படையில் மாணவாளர்களையும்
சாட்சியாளர்களையும் சேர்த்து திருமணம் செய்து நல்ல சந்ததியினர்கள் ஈன்றெடுப்பதற்கு துணையாக இருப்பவர்கள்தான் விவாகப் பதிவாளர்கள். யாரொருவர் நல்ல விடயங்களுக்கு வழிகாட்டுகின்றார்களோ அவர்கள் கூலியைப் பெற்றுக்
கொள்வார்கள். நல்ல சந்ததியினர்களை ஈன்றெடுத்து அவர்கள் சந்தோசமாக
வாழ்வதற்கு ஆரம்பத்திலே வழி வகை செய்கின்றவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் நற்கூலி இருக்கிறது. திருமண வீட்டில்
கிடைக்கின்ற அன்பளிப்புக்கள் அல்ல அல்லாஹ்விடத்தில் அதை விட மிகப்
பெறுமதியான கூலி இருக்கிறது. ஒரு திருமண வீட்டுக்குச் சென்றால் 2 அல்லது
3 மணித்தியாலங்கள் காக்க வேண்டி வரும். ஒரு ஏழை மனிதனாகச் சென்று
அந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர். எந்த முகமும் சுழிக்காமல் செய்து
வருகின்றார்கள். இவை அனைத்திற்கும் அல்லாஹ் விடத்தில் கூலி இருக்கிறது.
இப்படியான ஒரு சிறந்த பணியைச் செய்யக் கூடிய விவாகப் பதிவாளர்கள்
ஊரிலே மிகவும் கண்ணியமானவர்கள். மதிக்கப்படக் கூடியவர்கள். இது
அல்லாஹ்வுடைய மாபெரும் அருள். இது அல்லாஹ்வுடைய தெரிவு ஆகும்.
விவாகப் பதிவாளர் மிகவும் கண்ணியமான சிறந்த பதவியைச் செய்து வருகின்றார்கள்.
இது ஒரு மிகவும் பெறுமதியான நம்பிக்கைக்குரிய விடயம். இந்த நம்பிக்கைக்குரிய
விடயத்தை நாங்கள் சரியாக நிறைவேற்றுகின்ற போது ஏராளமான நன்மைகளை
நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம். ஒருவன் நம்பிக்கையை நிறைவேற்றா விட்டால்
அவனிடம் இறை நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லா விட்டால் அவனிடம்
மார்க்கமில்லை என்று நபி நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நம்பிக்கையினை துஷ்பிரயோகம் செய்வார்களோ இறுதி நாளின் அடையாளம்
விரைவாக வந்து விட்டது என்று எதிர்பாருங்கள் என்று நபி நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே இது ஒரு பெரிய நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது பொறுப்பு வாய்ந்த கடமை என்பதை நாங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
திருமணம் நடந்தேறும் சபையில் விவாகப் பதிவாளர்தான் உயர்ந்தவர். அதில் ஜனாதிபதியோ, அல்லது செல்வந்தரோ வேறு யாராக இருந்தாலும் அங்கு விவாகப்
பதிவாளர்தான் உயர்ந்த மனிதராக மதிக்கப்படுவார். திருமணம் நடந்தேறும்
சபையை நடத்துபவர் விவாகப் பதிவாளர்கள்தான். அந்தத் திருமணத்தை சரியாகச் செய்து வைத்தால்தான் நல்ல சந்ததிகள் உருவாகுவார்கள். பிழையான
முறையில் திருமணத்தைச் செய்து வைத்து விட்டோம் என்றால் உருவாகும்
சந்ததியினர்கள் சரியான முறையில் உருவாக மாட்டார்கள். எனவே இப்படி
இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான பிழையான திருமணத்தைச் செய்து
வைத்தால் இறைவனின் சாபத்திற்கு ஆளாகுவோம். மாபெரும் உத்தமான
பதவியும்தான். பயங்கரமான பதவியும்தான்.
விவாகப் பதிவாளர்கள் இஸ்லாமிய திருமணச் சட்டங்களுடைய முறைகளைத் தெளிவாகப் படித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் கல்வியைக் கற்றுக் கொள்வது அவசியம். தொழுகையா அதற்கான அறிவைப் படித்துக் கொள்ள
வேண்டும். வியாபாரமா அதற்கான அறிவைப் படித்துக் கொள்ள வேண்டும். அதே போன்று விவாகப் பதிவாளராக இருந்தால் திருமணம் பற்றிய சட்டத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். சில பேர் திருமணம் தொடர்பான சட்ட திட்டங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். அநேகமானவர்கள் படித்திருக்கலாம்;. ஆனால்
உலமாக்களிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும். அகில இலங்கை
ஜம்மிய்யதுல் உலமா சபையிலும் இது தொடர்பான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை யாவரும் விளங்கி கட்டாயம் படித்துக்
கொள்ள வேண்டும். திருமணம் என்று அழைப்பு விடுக்கப்படுகின்ற போதே
இத்திருமணத்தின் சாட்சி யார் என்று கட்டாயம் கேட்க வேண்டும். அவர் தொழுகை ஈடுபாடு உள்ளவராக இருத்தல் வேண்டும். அல்லாஹ்விடத்தில் அச்சம் உள்ளவராக
இருத்தல் வேண்டும். தொழாதவராகி விட்டால் சாட்சி சொல்லக் கூட இருக்க
முடியாது. அவர்கள் சாட்சி சொல்வதற்குக் கூட தகுதியில்லை. மதுபானம்
அருந்தி விட்டு வந்து சாட்சியாளராக கையொப்பமிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே இவைகளை விவாகப் பதிவாளர்கள் கட்டுப்படுத்த முடியும். சாட்சியாளர்
என்பது தந்தை வழியில் இருந்துதான் சாட்சியாளர் வருதல் வேண்டும். தந்தை
அல்லது தந்தையின் தந்தை ( அப்பா) இருத்தல் வேண்டும். தந்தை உயிரோடு
நாட்டிலோ வெளிநாட்டிலோ இருந்தால் வேறு யாரும் சாட்சி சொல்ல இயலாது.
வலி இல்லாமல் திருமணம் இல்லை. சாட்சியில்லாமல் திருணம் இல்லை. சாட்சி இல்லை என்றால் காதி நீதிபதியிடம்தான் செல்ல வேண்டும். வளர்ப்பு பிள்ளைகளைத் திருமணம் முடித்துக் கொடுப்பதாக இருந்தாலும் அதுவும் காதியிடம்தான் செல்லும். சில விவாகப் பதிவாளர்கள் முறையற்ற விதத்தில் திருமணத்தை முடித்துக் கொண்டு சீரழிவுக்குக் காரணமாகவும் இருக்கின்றனர். இதில் எல்லாரும் அல்ல. ஒருவர் செய்வதால் எல்லோருக்கும் கெட்ட பெயர் உருவாகிறது.
திருமண சபையில் திருமணப் பதிவாளர்கள்தான் செல்வாக்கு மிக்கவர் அந்தச் சபை அல்லாஹ்வின் புனிதமிக்க சபையாக கட்டுப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் சந்ததியினர்களை உருவாக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். விவாகப்
பதிவாளர்கள் என்பது முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கியமானர்கள்.
உலமாக்களிடம் விவாகம் தொடர்பான சட்டங்களைத் தேடிப் படித்து திருமண
சபையில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு முன் வருதல் வேண்டும். அல்லாஹ்வுக்குப் பயந்து இறையச்சமிக்க நல்ல சந்ததியினரை
ஈன்றெடுக்க விவாகப் பதிவாளர்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும்
உதவியினையும் நல்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை பிறப்பு
இறப்பு விவாகப் பதிவாளர் சங்கத்தின் தலைவர் துஷ்மந்த கருணாநாயக
உரையாற்றும் போது, இந்த விவாகப் பதிவாளர் சங்கமானது 1960 களில் தோற்று விக்கப்பட்ட சங்கமாகும். இதன் முதல் கூட்;டம் கொழும்பு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தச் சங்கம் விவாகம் தொடர்பிலான சட்ட திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய
சமய சட்ட திட்டங்கள் பற்றியும் தெளிவு படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்த சட்ட திட்டம் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில்
வட்சப் குழுமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனது வேண்டுகோளின்படி மௌலவி ரியாழ் அவர்களை தலைவராகக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சேர்ந்து இவ்வமைப்பை ஆரம்பித்தனர்.
முஸ்லிம் விவாகப் பதிவாளர் சங்கங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்லாசிகள் உரித்தாகட்டும். இதன் ஸ்தாபக
தலைவர் மௌலவி ரியாழ் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இங்கு வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்த அனைவரும் எமது நட்புக்குரியவர். முதல் தடவையாக இந்தச் சங்கத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் நாம் எல்லோரும் நட்புக்குரியவர்கள்.
இங்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளார்கள். நான் எதிர்பார்த்தது 100 பேர் மட்டும்தான். நான் எதிர்பார்த்த நோக்கம் வெற்றியளித்துள்ளது. எனது
கணிப்பீட்டுக்கு அதிகமாக அங்கத்தவர்கள் வருகை தந்துள்ளர்கள், 135 பேர் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
அம்பாறைப் பகுதிகளில் உள்ள விவாகப் பதிவாளர்கள் தொடர்பில் அதிகளவு
வேலைகளைச் செய்யும் படி நான் முன்னர் பணித்திருந்தேன். ரவுவ்சூக், அப்துல் அஸீஸ் ஆகிய இருவரும் பெரும் பங்காற்றினார்கள். நான் அம்பாறைக்குச் சென்று மாவட்ட விவாகப் பதிவாளர் சங்கத்தை தோற்று வித்தேன். அங்கு பல வேலைகள் செய்துள்ளோம்.
இதன் பணிக்காக 1140 ரூபா அரசாங்கம் வழங்குகின்றார்கள். அதில் ரூபா 240
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். மிகுதிப் பணம் 900 ரூபா விவாகப்
பதிவாளர்களுக்கு கிடைக்கின்றன. இதன் மூலம் எந்த விதமான நன்மைகளை விவாகப் பதிவாளர்கள் அடைய முடியாது. சேவை நலன் நோக்கத்திலேயே இந்தப்
பதிவாளர் சேவை இடம்பெறுகின்றது. அவர்கள் செல்லும் போக்குவரத்துச்
செலவுக்குக் கூட போதாது. இதே நிலைமைதான் சிங்கள, தமிழ் விவாகப்
பதிவாளர்களுக்கு உண்டு. ஒரு சேவை நலன் நோக்கோடுதான் இந்த விவாகப்
பதிவாளர் சேவை நடைபெறுகின்றது.
முஸ்லிம் விவாகத் திருமணத்தில் முஸ்லிம் பெண் ஒருவரின் திருமண எல்லை 12 வயது எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வயதில் எந்த வொரு திருமணமும் இதுவரையிலும் இடம்பெற்றதில்லை. வெறுமனே அது சட்டத்தில்
மட்டும்தான் உள்ளது. ஆனால் எல்லோரும் காலம் பிந்தித்தான் திருமணம் செய்து கொள்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் இங்குகின்ற அனைத்து விவாகரப் பதிவாளர் சங்கத்தின் கோரிக்கைளை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கின்றோம்.
முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் 300 பேர் அளவில் இருக்கின்றார்கள். புதிய
நியமனத்தோடு நாடளாவிய ரீதியில் 400 பேர் அளவில் இயங்கு வருகின்றனர்.
இந்தச் சங்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயற்படுதல் வேண்டும். தற்காலிகமாக இஸ்தாபிக்கப்பட்ட சங்கத்தை
மீண்டும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற விவாகப் பதிவாளர்கள் 12 பேர் பாராட்டி விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மடவளை எ. எஸ். எம். கியாஸ், வெலம்பொடு
ஏ. எல். எம். சுபைர், பன்விலை ஏ. எம். முஹ்சின், தென்னக்கும்புர மௌலவி ஏ.
எல். அபூபக்கர், கம்பளை சுலைமான் லெப்பை, திகன அப்துல் ரசாக், மாவில்மட எம். எச். எம் வஸீர் , உடுதெனிய மௌலவி எஸ். எச். எம். முஹ்ஸீன், கலகெதர எம். எஸ். எம். ரபீது, நாவலப்பிட்டி எம். எச். எம். சலாஹுதீன்,
கம்பளை எம். எஸ். எம். ஜிப்ரி ஹஸ்ரத், தெல்தோட்டை எம். எம். எம். சாதிக்
உள்ளிட்டோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.