தசுன் சானக அவுட், கருணாரட்ன இன். இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு..
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குசல் மெண்டிஸ் தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூவகை போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் தொடரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. அந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (09) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக ஆரப்பிக்கவுள்ளது.
இந்நிலையில் இத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருக்க அவ் அணியின் ஒரு சில வீரர்கள் நேற்றைய தினம் காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். மேலும் இத் தொடருக்கான குசல் மெண்டிஸ் தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் குழாத்தில் முன்னாள் அணித்தலைவரான தசுன் சானக இணைத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதிலாக சகலதுறை வீரரான சாமிக கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் துடுப்பாட்ட வீரர்களாக உதவித் தலைவர் சரித் அசலங்க, பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்ணான்டோ ஆகியோர்களுடன் இளம் வீரர்களான செஹான் டேனியல், ஜனித் லியனகே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரராக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார். இக் குழாத்தில் சகலதுறை வீரர்களாக சம்மிக கருணாரட்ன மற்றும் வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுழல்பந்து வீச்சாளர்களாக அகில தணஞ்சய, மகேஷ் தீக்சனவும் வேகப்பந்து வீச்சாளர்களாக துஸ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க மற்றும் பிரமோட் மதுஷான் ஆகியோர் அடங்களான பலமிக்க இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக் குழாத்தில் டெஸ்ட் அணியின் தலைவரான தனஞ்சய டி சில்வாவுக்கும் இடம் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)