இம்ரான் கான், மனைவிக்கும் சிறை தண்டனை..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறன.
அவ்வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று(03) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக குற்றம் சாட்டியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்து கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அடியாலா சிறையில் நேற்று(02) நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணையின் முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
71 வயதான இம்ரான் கான் மீது, சமீபத்திய நாட்களில் அரசு இரகசியங்களை கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள், புஷ்ரா பீவியுடன் சட்டவிரோதமாக அரசு பரிசுகளை விற்றதற்காக தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வழக்குகளிலும் அவர் மேல்முறையீடு செய்வதாக அவரது பிரதிநிதிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.