தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்க்கிறது.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ்
(ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024)
தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும்.
தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த நிதியத்தை தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க எடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை பிற்போக்குத்தனமானதாகும். ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதியத்தை பயன்படுத்தி நியாயமான வகையில் உர மானியத்தை வழங்குவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா. 2000 ஆக அதிகரிக்கவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.