பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிக்கல்..
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையிலும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும், “கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது” என, பல்வேறு நெருக்கடிகள் பெரமுனவுக்குள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் உள்ளது.
ஆனால், தம்மிக்க பெரேரா தற்காலிகமாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும், முக்கிய அமைச்சர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, மஹிந்த அமரவீர உட்பட சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். எனினும், வேட்பாளரை இறுதிப்படுத்த முடியாதுள்ளமையால் கூட்டணியை வலுப்படுத்தவும், பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், பொதுஜன பெரமுனவுக்கு முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென, கட்சியில் உள்ள ஒரு தரப்பு போர்க்கொடி உயர்த்தி வருவதுடன், அதற்கான யோசனைகளையும் கட்சியின் உயர்பீடத்தில் சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வலுவான கூட்டணியை அமைக்கவும், பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அதிகரித்துக் கொள்ளவும் இவர்கள் தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் எந்தத் தேர்தலாக இருப்பினும், பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில், நாடு முழுவதும் 2,500 அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் நம்பகமாகத் தெரியவருகிறது.
(ஐ. ஏ. காதிர் கான்)