விளையாட்டு

இளையோர் உலகக்கிண்ணம். வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி.

சிம்பாப்பே இளையோர் அணிக்கு எதிரான முதல் லீக் சுற்றின் முதல் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் அணி சம்பியன் கிண்ண வேட்டையை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி அவுஸ்திரேலியா, சிம்பாப்பே, நமீபியா ஆகிய அணிகளுடன் குழு சி இல் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று இடம்பெற்ற குழு சி இன் முதல் போட்டியில் இலங்கை இளையோர் அணி சிம்பாப்பே இளையோர் அணியை எதிர்கொண்டது.

கிம்பெர்லி டயமண்ட ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே இளையோர் அணி களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய களம் நுழைந்த இலங்கை அணிக்கு முன்வரிசை வீரர்கள் மிகச் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை இளையோர் அணி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இருப்பினும் மத்திய வரிசையில் வந்த டினுர கல்பஹான மற்றும் சார்ஜன் சன்முகநாதன் ஆகியோர் அசத்தல் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. டினுர கல்பஹான 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாருஜன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கோல் எக்டீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு 205 என்ற சவாலான இலக்கை நோக்கி களம் நுழைந்த சிம்பாப்பே அணியின் முதல் 3 விக்கெட்டுக்களும் 30 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் சிம்பாப்வே இளையோர் அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி இலக்காக 22 ஓவர்களுக்கு 129 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சுழலிலும் வேகத்திலும் அசத்த சிம்பாப்பே இளையோர் அணியால் 21.1ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. மெத்யூவ் 27 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் விஸ்வ லஹிரு மற்றும் மல்ஷ தனுபதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். டக்வேர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி 2 புள்ளிகளுடன் தமது புள்ளிக்கணக்கை ஆரம்பித்துள்ளது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *