உள்நாடு

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அதிரடித் தீர்மானம்!

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக “போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று” ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் மீட்கப்பட்ட 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு துறைமுகத்தில் நேற்று (24) மேற்பார்வை செய்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட முன்னெடுப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இலங்கையின் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களை பயன்படுத்தி காலியின் மேற்குப் பகுதியில் 91 கடல் மைல் (168 கி.மீ) தொலைவில் ஆள் கடல் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி போதைப்பொருள் கட்டளை நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கையின் மூலம் 65 சதவீத போதைப்பொருள் மாத்திரமே மீட்கப்படுவதோடு, ஏனைய 35 சதவீதமான போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றது.

தற்போதுள்ள தகவல்களுக்கமைய பெரிய கப்பல்களில் சர்வதேச எல்லைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படும் அதேநேரம், சிறிய படகுகள் ஊடாக நாட்டிற்குள் அனுப்படுவதோடு போதைப்பொருள் வலையமைப்பும் பெருமளவில் வியாபிக்கிறது.
போதைப்பொருள் வியாபாரத்திற்கு இணையாக ஆயுத விற்பனையும் இடம்பெறுகிறது. அது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். அதற்கான புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான புதிய போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று நிறுவப்படும்.
அதற்கான சட்டம் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” இவ்வாறு சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *