பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அரபு எழுத்துக்கலைக் கண்காட்சி..!
பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவியர் ஏற்பாடு செய்த அரபு எழுத்துக்கலைக் கண்காட்சி மார்ச் 27ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லிம் மஜ்லிஸின் 2024/25 ஆண்டுக்கான முன்னெடுப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட “அரபு எழுத்துக்கலை” பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவியர் கடந்த ஆண்டில் இந்தக் கலைப் பயணத்தைத் தொடங்கினர். எழுத்தின் வளைவுகள் மற்றும் கோடுகளைக் கற்றதோடு மட்டுமல்லாமல், அதனுடன் தொடர்புடைய ஒழுக்கம், அமைதி மற்றும் ஆன்மீக உணர்வுகளையும் அவர்கள் அனுபவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற வகுப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, மாணவியர் தங்களது கற்றலின் வெளிப்பாடாக இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வு, மாணவியரின் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கலை நுணுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வித்யா சமுக்க ஜோதி அல்-ஹஜ் எம்.சி. பஹர்தீன் (லங்கா அக்ரோ பிராசஸிங் (பிரைவேட்) லிமிடெட் தலைவர்) கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவியரின் படைப்பாற்றலைப் பாராட்டி, இத்தகைய கலை முயற்சிகள் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு கல்லூரி அதிபர் திருமதி நஸ்ரியா முனாஸ் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸின் பொறுப்பாசிரியர் திருமதி ஃபரா ரிஃபார்ட் ஆகியோர் வழங்கிய ஆதரவுக்கு மாணவியர் நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், இந்த முயற்சியை வழிநடத்திய, கல்லூரியின் முன்னாள் மாணவியுமான மற்றும் 28 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுடைய அரபு எழுத்துக்கலை நிபுணர் திருமதி மர்ஹானா நசீம் அவர்களுக்கும் மாணவியர் நன்றியை தெரிவித்தனர்
(அஷ்ரப் ஏ. சமத்)






