தவறவிட்ட தங்கநகைகள், பணத் தொகையை ஒப்படைத்த ஆட்டோ சாரதிக்கு கௌரவிப்பும், பாராட்டுக்களும்..!
பெண்ணொருவரால் தவற விடப்பட்ட தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பணப் பையை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட ஆட்டோ சாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – ஹிஜ்ரா நகர் இன்ஷானியா வீதி எனும் முகவரியில் வசித்து வருகிறார் 42 வயதுடைய ஆட்டோ சாரதி முகம்மது முஸ்தபா இக்பால் என்பவர்.
இவர், சனிக்கிழமை (28) ஆம் திகதி காலை 9 மணியளவில் நாவலடி பகுதியில் இருந்து வாழைச்சேனை நோக்கி பயணிக்கும் போது ஓட்டமாவடி தேசிய பாடசாலை அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பணப் பை ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்துள்ளார்.
அதை அவர் திறந்து பார்த்த போது அதனுள் தங்க நகைகள், பணத் தொகை, கைத்தொலைபேசி மற்றும் ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.
அதை அடையாளம் கண்டு உரிய நபருக்கு ஒப்படைக்க வேண்டி வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவ்விடம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் நகைகளை தவறவிட்ட பெண்ணை அடையாளம் கண்டு ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை தாஜ்மகால் வீதியைச் சேர்ந்த பெண் அன்றைய தினம் வங்கிக்குச் சென்று ரிதிதென்னை பகுதியிலுள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு பஸ் தரிப்பிடத்தில் நிற்கும் போதே பணப்பையை தவற விட்டுள்ளார்.
குறித்த பெண் பஸ் வண்டியில் ஏறி நடுத்துனரிடம் டிக்கெட் பெறுவதற்கு பணத்தை எடுக்க நினைத்த போதுதான் பணப் பையை தவறவிட்ட நினைவு வந்துள்ளது.
14 இலட்சம் பெறுமதியான 4 பவுன் தங்க நகைகள், பத்தொன்பதாயிரத்து நானூற்றி இருபது ரூபாய் பணத் தொகை, கையடக்கதொலைபேசி, சில ஆவணங்கள் உள்ளிட்டவைகள் தொலைந்த அதிர்ச்சியில் பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்தான் தான் தவறவிட்ட பொருட்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஒப்படைத்துள்ள மகிழ்ச்கரமாண தகவல் அந்தப் பெண்மணிக்கு தெரிய வந்துள்ளது.
தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடிக்க ஈவிரக்கமின்றி கொடூர கொலை செய்யும் இந்த மனித மிருகங்களுக்கு மத்தியில் இவ்வாறான நல்லுள்ளம் கொண்ட நபர்கள் மேற்கொள்ளும் நற்காரியங்கள்தான் இந்த பூமியில் இறைவனின் அருள் கிடைத்து வருகிறது.
யாரும் காணத நிலையில் பெறுமதி மிக்க நகைகளையும் பணத்தையும் கண்டெடுத்த இக்பால் அதைக் கண்டு ஆசைப்படாமல் அவரது கஸ்ட நிலைக்கு மத்தியிலும் உரிய தாயிரிடம் ஒப்படைத்த அந்த சம்பவம் நல்லதோர் எடுத்துக் காட்டாக திகழ்கிறது.
சுமார் 22 வருடங்களாக ஆட்டோ சாரதியாக தனது தொழிலை மேற்கொண்டு வரும் இவர் தனது தொழிலை நேர்மையாக மேற்கொண்டு வரும் ஒரு பண்பான நபராவார்.
நேரம் காலம் பாராது, பிறருக்கு உதவும் நோக்கில் இக்பால் தனது தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு கஸ்ட நிலையிலும் தனது தொழிலை மேற்கொண்டு வந்த நிலையில் கண்டெடுத்த தங்க நகைகள், பணத் தொகை ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்து ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இக்பால் பாராட்டி கௌரவிக்கப்பட்டு வருகிறார்.
அந்தவகையில், வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.முகம்மட் ராசிக் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு (29) ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்றது.
அதேபோன்று, அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு திங்கட்கிழமை (30) அதிபர் எம்.யூ.நளீம் ஸலாமி தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன், ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு திங்கட்கிழமை (30) அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையிலும், கேணிநகர் மதீனா வித்தியாலயம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளின்போது ஆட்டோ சாரதி இக்பால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)






