அரசாங்கத்தில் அனுபவமுள்ளவர்கள் இல்லை; ஹிஸ்புல்லாஹ் எம்.பி
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரில் இலங்கையும் சிக்கிக் கொண்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி வாவிக்கரை பூங்கா திறப்பு விழா நிகழ்வு (22) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
ஈரானுடைய கப்பல் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட விவகாரத்தில் நாடு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கப்பலில் இருந்து உயிர் தப்பியுள்ளவர்களை ஈரான் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. அவர்கள் எங்களை தாக்கியவர்கள் அவர்களை எங்களிடம் தாருங்கள் நாங்கள் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்கிறது.
அரசாங்கம் இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாலாத காரணத்தினால் இலங்கையும் மத்திய கிழக்கில் நிலவும் யுத்தத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது.
இலங்கை ஒரு சிறிய நாடு இந்த பிரச்சினைகளுக்கு இலங்கை முகம் கொடுக்க எந்த பலமும் சக்தியும் கிடையாது.
தற்போதைய அரசாங்கத்தில் அனுபவமுள்ளவர்கள் இல்லை. சர்வதேச ரீதியாக உறவுகளைப் பேணக் கூடியவர்கள் இல்லை. அவர்கள் பலரை தள்ளிவைத்துள்ளார்கள்.
ஆலோசனைகளை வழங்க எங்களுக்கு யாரும் தேவையில்லை என்று அரசாங்கம் தன்னிச்சையான போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால் மொத்த நாடும் மிக மோசமான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என நாம் இந்த அரசாங்கத்திற்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
நாங்கள் எதிர்க் கட்சி என்பதற்காக அரசாங்கத்தை எதிர்க்கின்றவர்கள் அல்ல. எப்போதும் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகின்றவர்கள்.
யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐந்து வருடங்களுக் ஆட்சி செய்வார்.
இந்தக் காலத்துக்குள் அரசாங்கத்திற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கம் மிக நிதானமாக, அவதானமாக அமெரிக்கா – ஈரான் விவகாரத்தை கையாள வேண்டும். இருக்கின்ற பிரச்சினைகளை நாம் அதிகரித்துக் கொள்ளக் கூடாது.
இந்த சூழ்நிலையில் நாங்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இதை மிகக் கவனமாக கையாண்டிருந்தால் இந்தப் பிரச்சினையை நாம் தடுத்திருக்க முடியும்.
இந்த சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும். சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கு அரசியலை வைத்துக் கொண்டால் நாம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
நாங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அரசாங்கத்துக்கு எமது ஆதரவை வழங்க எதிர்பார்க்கின்றோம். என்றார்.
(எச்.எம்.எம்.பர்ஸான் – ஓட்டமாவடி நிருபர்)
