பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர், நாவிதன்வெளியில் அடிக்கல் நடும் நிகழ்வு..!
பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நிகழ்வு நிந்தவூர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் இன்று (24) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 26 வீடுகளில் முதல் 04 வீடுகளுக்கும் நாவிதன்வெளி பிரதேசப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளில் 2 வீடுகளுக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில் நுட்ப அலுவலர் மற்றும் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)






