Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

வேதம் வழங்கப்பட்ட சமூகங்களை ஏமாற்றும் ஏகாதிபத்தியம் தோல்வியுறும்!பெருநாள் பிரார்த்தனைகள் பெறுமதியாகட்டும்-மக்கள் காங்கிரஸ் தலைவர், றிஷாட் எம்.பி

சத்தியம் வென்று, அசத்தியம் அழியுமென்ற நம்பிக்கை இஸ்லாமியர்களின் அடிப்படைகளிலொன்று எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன், இவ்வாறான மற்றொரு இறை நம்பிக்கையில் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் “ஈத்முபாறக்”உரித்தாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

புனித நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இஸ்லாத்தின் ஐந்து பிரதான தூண்களில் நோன்பும் ஒன்று. ஏனைய கடமைகளை விடவும் இறைவனுடன் விசுவாசிகளை இரகசியமாக இணைக்கும் கடமையே நோன்பு. ஐம்புலன்களையும் ஆன்மீக உணர்வுக்குள் அடக்கி, அல்லாஹ்வுக்காக நல்லமல் செய்தோம்.

ரமழானில் நாம் செய்த பிரார்த்தனைகள் அனைத்தையும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக. அநியாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள எமது சமூகத்துக்காக (உம்மத்) நாம் கையேந்தினோம். எமது பிரார்த்தனைகள் வீணாகவில்லை. இதற்கான சான்றுகளையே நாம் கண்டு வருகிறோம். தீர்க்கதரிசிகளின் தேசமான மத்தியகிழக்கைச் சூறையாட வந்த ஏகாபத்தியம் ஏமாற்றத்துடன் திரும்பும் வேளையிது.

இறைதூதர் இப்றாஹிமின் மதங்கள் காலூன்றியது மட்டுமன்றி வேரூன்றியதும் இந்த மத்தியகிழக்கில்தான். யூதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய வேதங்கள் தோன்றிய இப்புனித தேசத்தை, இன்று சில தீய சக்திகள், தீயிலிடத் துடிப்பது ஏன்?.வேதம் வழங்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் வேற்றுமையைத் தூண்டி, லௌகீக ஆதாயங்களை அடைய முயலும் எந்தத் தரப்பினரும் வெற்றி பெறப்போவதில்லை. “ஆப்ரஹாம்” உடன்படிக்கையின் கீழ், காசா மற்றும் இஸ்ரேல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

சர்வதேச விவகாரங்களை உள்நாட்டுக்குள் நுழைப்பதாக எவரும் கருதக் கூடாது. முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் எமது உடன்பிறப்புகளே. ஆக்கிரமிப்புக்கள் எங்கு நடந்தாலும் அது அநியாயமே.இவற்றை துணிச்சலுடன் எமது கட்சி எதிர்க்கும்.

எண்ணெய் தேசங்கள் பற்றி எரிவதால் ஏற்படப்போகும் உள்நாட்டு விளைவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் எமது மக்களை சிக்கலுக்குள்ளாக்க கூடாது. கடந்த கால அனுபவங்களை நாம் மறப்பதற்கில்லை. இருந்தாலும் எவ்வித சிரமங்களுமின்றி முஸ்லிம்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம். முஸ்லிம் சகோதரர்களுக்கு “ஈத் முபாறக்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *