Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டின் அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, புனித அல்-குர்ஆனை ஓதி, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு அல்லாஹு தஆலா இவ்வருடம் ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான்.

நாடுபூராகவும் இந்நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இப்பெருநாள் தினத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீங்கவும், அட்டூழியங்கள் அழிந்து ஈரான் உட்பட மத்திய கிழக்கு பகுதிகளிலுள்ள தற்போதைய யுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் அனைத்திலும் அமைதியும், பாதுகாப்பும், சுபீட்சமும் ஏற்படவும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் நாம் பிரார்த்திப்பதோடு,

பலஸ்தீன் காஸா பகுதிகளில் வாழும் அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் வெகு விரைவில் நீதி கிடைப்பதற்கும் அவர்கள் மீது அமைதியும், சமாதானமும் நிலவுவதற்கும் பிரார்த்திப்போம்.

அத்துடன் மேலைத்தேயம், கீழைத்தேயம் என்றில்லாமல் எல்லா நாடுகளிலும் மக்கள் ஏக்கத்தோடு உலக சமாதானத்தை வேண்டியவர்களாகவே வாழ்கின்றனர். அவர்களது ஏக்கம் தீர யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாகவும் புதிய உணர்வோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ வல்ல அல்லாஹ்வின் அருளை வேண்டுவதோடு,

நமது நாடான இலங்கை போன்ற சில வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார பாதிப்பினால் மீண்டும் ஒர் இருண்ட யுகத்திற்கு போகாமல் இந்நாடுகளை பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாத்து இந்நாட்டு மக்கள் அமைதி, அபிவிருத்தியுடன் வாழவும் துஆ செய்வோம்.

மேலும், இந்த ஈகைத் திருநாளில் எமது குடும்ப உறவுகளோடும் எமது கடமை நிலையங்களில் உள்ளவர்களோடும் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணுவதோடு எம்மோடு சேர்ந்து வாழும் அயலவர்களும், தேவையுடையவர்களும் இப்பெருநாளை நல்லமுறையில் கொண்டாடிட எம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து கொடுப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் எமது எல்லா செயற்பாடுகளையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வானாக!

تقبل الله منا ومنكم

முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *