உள்நாடு

நிந்தவூர் ஜாபிர் அல்-அஹமத் நகரில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத்திட்டம் அங்குரார்ப்பணம்

தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் “க்ளீன் சிறிலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வளமான நாடு – வளமான கிராமம்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தி சமூக உற்பத்தித் திறனை மேம்படுத்தும் மாதிரி கிராமத்திட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் 09 ஆம் பிரிவிற்குட்பட்ட ஜாபிர் அல்-அஹமத் நகரில் நேற்று (16) திங்கட்கிழமை சிறப்பாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், உதவிப் பிரதேச செயலாளர் டி.ஜெஸான், பிரதேச சபை உறுப்பினர் ஏ. இப்திகார் அஹமட், க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம். எல். சம்சுன் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது தேசிய உற்பத்தித் திறனை பிரதிபலிக்கும் கீதம் அடங்கிய காணொளியும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் விளக்கக் காணொளியும் இலத்திரனியல் திரையில் அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமூக உற்பத்தித் திறனின் முக்கியத்துவம், அதன் நோக்கங்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதன் தாக்கம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையுரையாற்றி, சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்குபற்றலும் இத்திட்டத்தின் வெற்றிக்கான முக்கியத் தளமாக இருப்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வில், இத்திட்டத்திற்கான மாதிரிக் கிராம பெயர் பலகை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு, திட்டத்தின் ஆரம்பம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியானது, சமூகப் பங்களிப்புடன் நிலைத்த முன்னேற்றத்தை நோக்கி நிந்தவூர் பகுதியின் கிராம வளர்ச்சிக்கு புதிய திசையொன்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *