மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அதிகாரிகள், மாதிரிகளை சோதனை செய்த பின்னர் இன்றைய தினமே எரிபொருளை கப்பலிருந்து இறக்கத் தொடங்குவோம்.
இந்த கொள்கலன்களில் 18,000 மெட்ரிக் டொன் டீசல், 17,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டொன் சூப்பர் டீசல் உள்ளது.
மேலும், நாங்கள் முன்பதிவு செய்த கப்பல்கள் வழமை போன்று போல் கொழும்பை வந்தடையும்.
பயணிகள் பேருந்துகளுக்கு டிப்போக்களில் இருந்து எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டு டிப்போக்களுக்கான எரிபொருள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் அந்தக் கணக்குகளிலிருந்து பல்வேறு தரவுகளைச் சேகரிக்க முயற்சிக்கிறோம்.
சிலர் அனைத்து தகவல்களையும் சேகரித்து மற்றவர்களின் பெயர்களில் QR குறியீடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். fuelpass.gov.lk என்ற வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த வலைத்தளத்தையும் நாங்கள் வெளியிடவில்லை.
ஆகவே இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். போலியான வலைத்தளங்களில் தரவுகளை உள்ளிட்டால் QR குறியீட்டை பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.
