பேருவளையில் மாணவர்களுக்கான “Ramadan Spring – 2026” ஆன்மீக மற்றும் ஆளுமை விருத்தி கற்கைநெறி வெகுவிமரிசையாக நிறைவு
பேருவளை, மஹகொடை பிரதேச இளைஞர்களின் ஒன்றிணைந்த அமைப்பான “யூத் விங் மஹகொடை” (Youth Wing Mahagoda) ஏற்பாடு செய்திருந்த “Ramadan Spring – 2026” ஆன்மீக மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நெறியின் இறுதிச் சான்றிதழ் வழங்கும் விழா, கடந்த வியாழக்கிழமை பேருவளை ஐ.எல்.எம். ஸம்சுதீன் வித்தியாலய பிரதான மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியப இக்கற்கைநெறியானது, இளம் தலைமுறையினரிடையே இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதோடு, அவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பெப்ரவரி 20 தொடக்கம் மார்ச் 08 வரை செயலமர்வுகளும் இறுதிப் பரீட்சைகளும் இடம் பெற்றது.
இக்கற்கைநெறியில் அடிப்படை இஸ்லாமிய கல்வி, அல்குர்ஆனுடனான சீரான உறவைப் பேணல், ஹதீஸ் மற்றும் துஆக்கள் மனனம், இஸ்லாமிய வரலாறு மற்றும் ஆளுமை விருத்திப் பயிற்சிகள் , உடல் நலம் எனப் பல்துறை சார்ந்த விடயங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டன.
யூத் விங் மஹகொடை அமைப்பின் தலைவர் சகோதரர்
உஸாமா நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஜே.எம்
அரபாத் கரீம் (நளீமி) கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில், “இன்றைய நவீன உலகில் மாணவர்கள் கல்விப் புலமையில் சிறந்து விளங்குவதோடு மாத்திரமன்றி, ஆன்மீக பலமும், சிறந்த ஒழுக்கமும் கொண்டவர்களாக வளர வேண்டும்” என வலியுறுத்தினார்.
கௌரவ விருந்தினராக ஐ.எல்.எம்.
ஸம்சுதீன் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி ரயீஸா அஜ்வாத் அவர்களும், விசேட அதிதியாக அஷ்ஷெய்க் எ.ஆர்.எம். ஷரபான் (நளீமி) மற்றும் பேருவளை நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் பயாஸ் அஸ்வர் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், வாய்மொழி மற்றும் எழுத்துப்பரீட்சைகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் செயலமர்வுகளின் வளவாளர்களுக்கும், நிகழ்வின் அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காக 2018 O/L Batch Deeniyans இளைஞர் குழுவிற்கும், ஒருங்கிணைப்பாளர் குழுவிற்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.







(பேருவளை பீ.எம். முக்தார்)
