புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பிரதேச செயலகங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் நவீன டிஜிட்டல் ஸ்கேனர் (Digital Scanners) இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களினதும் உத்தியோகபூர்வ பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த நவீன ஸ்கேனர் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அரசாங்க ஆவணங்களை விரைவாக டிஜிட்டல் மயமாக்கி முறைப்படுத்துவதன் ஊடாக பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக குமார, எம் ஜே எம் பைசல், அஜித் கிஹான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, புத்தளம் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






( எம் எச் எம் சியாஜ்)
