உள்நாடு

பாரதி கண்டபுதுமைப்பெண்ணுக்காக உம்மு ஹானி புஷ்ராவுக்கு செந்தமிழ் அருவி விருது

2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய, இந்தியா – தமிழ்நாடு, கரூர் – பள்ளப்பட்டி யைச் சேர்ந்த கவி கற்பக விருட்ச விருது பெற்ற குட்டிப் பெண் ஆளுமை இளங்கவி செல்வி அ.ம. உம்மு ஹானி புஷ்ரா, செந்தமிழ் அருவி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


பள்ளப்பட்டி – “உஸ்வத்துல் ஹஸனா” பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயிலும் இளம் மாணவியான இவர், “பாரதி கண்ட புதுமைப்பெண்” எனும் தலைப்பில் தனது நீண்ட சிறப்புச் சொற்பொழிவையாற்றி இந்த விருதினை வென்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம், இம்மாணவியின் திறமையைப் பாராட்டி, மயிலாடுதுறை – வருவாய்த்துறை ஊழியர் சங்கக் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற மாபெரும் சிறப்பு விருது வழங்கல் விழா நிகழ்வின்போது, இவருக்கு செந்தமிழ் அருவி விருது, நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் என்பனவற்றை வழங்கி பாராட்டி கௌரவித்தது.


சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் திரு ஆர். சுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் சாமி. கணேசன், மாவட்டப் பொருளாளர் திரு பா. ஜெயபிரகாசம், அஞ்சல் ஓய்வூதியர் திருமதி செ. ரேணுகா தேவி ஆகியோர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் சிறப்புப் பங்கேற்றனர்.


இம்மாபெரும் சிறப்பு விழா மேடையில் மூத்த அறிஞர்கள், கல்வி ஆளுமைகள் எனப் பல பிரபலங்கள், “தமிழ் மொழியின் சிறப்புக்களை இந்தச் சிறுமியைப் போல் வேறு யாரும் கூற முடியாது” என, இம்மாணவியின் அபார தமிழ் ஆற்றலைப் பாராட்டியதோடு, அவர்களின் கரங்களினாலேயே சிறப்புப் பொண்ணாடைகள் போர்த்திக் கௌரவித்து வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *