சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் 3வது வருடமாக அல்குர்ஆன் தமாமும், இப்தார் நிகழ்வும்!
பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரமலான் மாதம் மாணவர்களால் ஓதப்பட்ட 30 அல்குர்ஆன்கள் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் கலாபீட பஸிய்யா மண்டபத்தில் எதிர்வரும் 15/03/2026 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஷாதுலிய்யா தரிக்காவின் உலக ஆன்மீக தலைவர் ஷைகுஸ் ஸஜ்ஜாதா அஷ்ஷைக் மஹ்தி அல்பாஸி அன்னவர்களின் அனுமதியுடனும் இலங்கைக்கான கலிபத்துல் குலபா மௌலவி அல் உஸ்தாத் எம். இஸட் முஹம்மத் ஸுஹூர் (பாரி)யின் ஆலோசனையுடன் 3வது வருடமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம் ஜே எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ .ஏ), கலாபீட அதிபர் மௌலவி எம் ஏ எம் அஸ்மிகான் (முஅய்யிதி) ஆகியோரின் தலைமையில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் எம். சீ. எம் ஹம்ஸா, கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் மெளலவி இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், ஷாதுலிய்யா இக்வான்கள்,பெற்றோர்களுடைய பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் முழு நேர கிதாப், மற்றும் ஹிப்ழ் வகுப்பு மாணவர்களுடன் பகுதி நேர ஹிப்ழ் வகுப்பு மாணவர்களும், பகுதி நேர குர்ஆன் மத்ரஸா மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொள்ள இருப்பது சிறப்பம்சமாகும். இந்த 30 அல்குர்ஆன்கள் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரிலும், ஷாதுலிய்யா தரீக்காவின் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (றழி) உட்பட ஷாதுலிய்யா மஷாயிக்மார்கள், அஹ்லு பைத்துகள், முன்னாள் கலீபத்துல் குலஃபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), எம்மை விட்டும் பிரிந்த கலீபாக்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சீனன் கோட்டையில் வாழ்ந்து மரணித்தவர்கள், கலாபீடத்துக்கு பாடுபட்டு மறைந்தவர்கள், அனைத்து முஸ்லிமான ஆண்கள் பெண்கள் பேரிலும் தமாம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உலகெங்கும் நிரந்தர சமாதானம், நிம்மதி ,சுபிட்சம் வேண்டியும் இங்கு விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.


(பேருவளை பி. எம் முக்தார்)
