மொஜ்தமா கொமெய்னி தகவலுக்கு ஒரு கோடி டொலர் சன்மானம்; அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய ஆன்மிகத் தலைவா் மொஜ்தபா கொமெய்னி பற்றி தகவல் அளித்தால் ஒரு கோடி டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே (பெப்ரவரி 28) ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமெய்னி கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரின் மகன் மொஜ்தபா கொமெய்னி புதிய தலைமை மதகுருவாக தோ்வு செய்யப்பட்டாா். ஈரான் மக்களுக்கு அவரது அறிக்கை அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில், இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதனிடையே, ஜெருசலேமில் செய்தியாளா்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், ஈரானின் புதிய ஆன்மிகத் தலைவா் மொஜ்தபா கொமெய்னி உள்பட 10 தலைவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, இவர்கள் குறித்து தகவல் அளித்தால் ஒரு கோடி டொலர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஜ்தபா கொமெய்னி அலுவலகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், இராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர், புலனாய்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
