ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்தார் பிரதமர் ஹரிணி
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இருதரப்புக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. பிரதமரை வரவேற்ற தலைவர் Masatsugu Asakawa,அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின்போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடன் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியாவுக்கான) பிரதித் தலைவர் Yingming Yangயை பிரதமர் சந்தித்தார். இதன்போது, இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
துறைசார் குழு 3 இன் (Sectors Group 3) பணிப்பாளர் நாயகம் Christine Engstrom அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மானுட மற்றும் சமூக அபிவிருத்தி, பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முதலீடுகளின்போது, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மேலதிகமாக, மனிதவள மேம்பாடு மற்றும் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ASEAN நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி குறித்த கொள்கை விளக்க உரையாடலில் பிரதமர் கலந்துகொண்டார். பிராந்திய கல்வி முறைகள், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கொள்கைப் பரிமாற்றம் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்துப் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் அபிவிருத்தி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த மணிலா விஜயமானது, நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்தல், கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிராந்திய பங்காளிகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.



