எரிபொருள் நெருக்கடி; பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு விடுமுறை
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை, அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு மற்றும் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இது குறித்து உரையாற்றுகையில், பிராந்திய மோதல்களால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளை முன்கூட்டியே முகாமை செய்யவும், சேமிப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மார்ச் 16 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக இணையவழி (Online) வகுப்புகளுக்கு மாற வேண்டும்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசுத் துறைகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளில் 50% குறைக்கப்படும்.
எரிபொருளைச் சேமிக்க அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் (வங்கிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).
50% அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு (Work from home) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவைக்காக இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதால், உலகளாவிய எரிசக்தி விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் அந்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் உள்நாட்டுத் தேவையை கட்டுப்படுத்தவே அரசு இத்தகைய அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
