உள்நாடு

2026 அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடத்திவரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை ஆறாவது வருடமாக கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.ஐ. ஷிஹாமுதீன் நடத்திய, தயாரிப்பாளர் முஹம்மத் றலீன் தயாரித்து வழங்கிய அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மார்ச் 07ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 10 அல்ஹிதாயா கல்லூரி எம்.ஸி. பஹார்தீன் மண்டபத்தில் நடைபெற்றன. நாடளாவிய ரீதியில் 60 பாடசாலைகள் பங்குபற்றிய அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களுக்கும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இரண்டாம் இடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும் மூன்றாம் இடத்தை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களும் பெற்றுக் கொண்டனர்.

முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாவும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் நான்காம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாவும் சான்றிதழும் பரிசுப் பொதியும் Colombo Commodities நிறுவன தலைவர் சமூக தீபம், வித்தியா சமூக ஜோதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக Colombo Commodities நிறுவனத்தின் தலைவர் சமூக தீபம், வித்தியா சமூக ஜோதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களும் விஷேட அதிதிகளாக நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஹாஜியானி திருமதி ஷஹ்ரியா பஹார்தீன், பாஸித் பஹார்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(ஜெம்சித் அஸீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *