உலகம்

மொஜ்தபா கொமெய்னி ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக தேர்வு

ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அயதுல்லா கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார். மேலும் இராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

ஒரு வாரத்துக்கு மேலாக ஈரானில் போரிட்டு வரும் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து தீவிரமாக போர் புரியும் வலிமை எங்களுக்கு இருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அயதுல்லா கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *