உள்நாடு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடி தொடர்பாக இலங்கையின் முஸ்லிம் சமய மற்றும் சமூக அமைப்புகளின் பொதுமக்களுக்கான கூட்டு அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள இலங்கையின் முஸ்லிம் மத அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுவரும் கொடூரமான படுகொலைகள் தீவிரமாக அதிகரித்து வருவது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் வன்மையான கண்டனத்தையும் வெளியிடுகிறோம்.

இஸ்ரேலிய சியோனிஸ ஆட்சியாளர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா (USA) இணைந்து மேற்கொண்ட சட்டவிரோதமான தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நாங்கள் வலுவாக கண்டிக்கிறோம்.

இந்நடவடிக்கைகள் நிரபராதிகளான பொதுமக்கள் பலரின் துயரமான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளன. குறிப்பாக எந்தத் தூண்டுதலும் இன்றி தொடங்கப்பட்ட இந்தப் போரின் முதல் நாளிலேயே, ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 165 நிரபராதிகளான ஆரம்ப வகுப்பு மாணவிகள் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயுதமற்ற பொதுமக்களை திட்டமிட்டு குறிவைத்து தாக்குவது சர்வதேச சட்டத்திற்கும், மனிதாபிமானக் கொள்கைகளுக்கும், நீதி மற்றும் மனித கௌரவத்தின் அடிப்படைத் கொள்கைகளுக்கும் வெளிப்படையான மீறலாகும்.

மேலும், ஒரு சுயாட்சியுள்ள நாட்டின் உயர்மட்ட தலைமைப் பிரதிநிதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் படுகொலைச் செயல்களை, குறிப்பாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் உச்சத் தலைவரான நாட்டின் தலைவரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் மூன்றாம் உலக நாடுகளின் சுயாட்சிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். மேலும், இவை பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்த தன்மையை பாதிக்கும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற பதற்ற உயர்வை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், இப்பிராந்தியத்தில் உள்ள எதிரி இராணுவத் தளங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளைத் தாண்டி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு பதிலடி நடவடிக்கைகளையும் ஈரான் மேற்கொள்ளக்கூடாது என்பதையும் நாங்கள் தெளிவாக வலியுறுத்துகிறோம். அத்தகைய நாடுகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

இந்த மோதல் மத்திய கிழக்குப் பகுதிக்கே மட்டுமல்லாமல் இலங்கை போன்ற பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். வர்த்தகத்தில் ஏற்படும் தடைகள், எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பில் ஏற்படும் ஆபத்துகள், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்.

சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான போர்கள் அவற்றின் எல்லைகளைத் தாண்டி எண்ணற்ற மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனவே, நாங்கள் பின்வருமாறு வலியுறுத்துகிறோம்:

  1. அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் நிபந்தனையற்ற முறையிலும் போர்நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.
  2. சர்வதேச சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிப்பதையும் அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதையும் உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு (UN) உடனடியாக அர்த்தமுள்ள மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  3. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்று, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏற்கனவே அமுலில் உள்ள பிற நடைமுறைகள் வழியாக உரையாடலுக்கு திரும்பி, நம்பகமான சர்வதேச நடுவர் முயற்சிகள் மூலம் அமைதியான தீர்வுக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகிறோம்.

மேலும், இலங்கை அரசாங்கம் நீதிக்காக உறுதியாக நிலைப்பாடு எடுத்து, நாட்டினுள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளை பாதுகாக்க வேண்டும். அதேபோல், இந்த நெருக்கடியின் எதிர்மறை விளைவுகளிலிருந்து நாட்டை பாதுகாக்க முன்கூட்டியே தேவையான இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அல்லாஹ் அடக்குமுறைக்கு உள்ளாகியவர்களை பாதுகாத்தருள்வானாக! ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்துவானாக! உலகத் தலைவர்களை நீதியின் பாதைக்கு வழிநடத்துவானாக! மனிதகுலத்திற்கு நிலையான அமைதியும் நிலைத்த தன்மையையும் அருள்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *