நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை 77 பயணிகளுடன் தொடங்கியது
நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை 77 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம் சேதமடைந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் பணிகள் கப்பல் கடந்த அக்டோபர் 25ம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் மற்ற நாட்களில் கப்பல் சேவை தொடரும். இருவழி கட்டணம் ரூ.8 ஆயிரம். இந்தியாவை சேர்ந்த 70 பேர், இலங்கையை சேர்ந்த 6 பேர், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 77 பேர் முதல்நாளில் பயணம் சென்றனர்.
இலங்கையில் இருந்து மாலையில் வரும் கப்பலில் 80 பேர் இந்தியா வருகின்றனர். லட்சத்தீவில் இருந்து மற்றொரு கப்பல் விரைவில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வரவுள்ளது. பயணிகளிடம் வரவேற்பு அதிகமாக இருப்பதால் இரண்டு கப்பல்கள் விரைவில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கப்பலில் அனுமதிக்கப்பட்டனா். இந்த கப்பல் வாரத்தில் 6 நாள்கள் (செவ்வாய்க்கிழமை தவிா்த்து) நாகை-காங்கேசன்துறை இடையே இரு மாா்க்கத்தில் இயக்கப்படுகிறது. 250 பயணிகள் பயணிக்கும் புதிய கப்பல் மாா்ச் 20-ஆம் தேதி நாகை துறைமுகத்துக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
