Uncategorized

இலங்கைக் கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழு; ஐ.சி.சி யுடன் பேச்சு

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐ.சி.சி) பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

இன்று (05) அமைச்சில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாட்டில் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு ஆதரவளிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தலையிட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி உட்பட சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்று அமைச்சர் கமகே குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணக்கப்பாட்டுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கைக்கு கிரிக்கெட் தடையைப் பெற்றுக்கொண்டு விளையாட்டை மேம்படுத்த முடியாது என்பதால், விளையாட்டைப் பாதுகாத்துக்கொண்டு கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் வரவிருக்கும் முயற்சிகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை எவர் மீதும் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த மறுசீரமைப்பு காலகட்டத்தில் வீரர்களை அவமதிக்கும் அல்லது அவமரியாதை செய்யும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *