தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்த அரச காணி மீட்பு; வாகரை பிரதேச செயலாளருக்கு உறுப்பினர் கைதர் நன்றி தெரிவிப்பு
தனிநபர் ஒருவர் கையகப்படுத்தி வைத்திருந்த அரச காணியை வழக்குத்தாக்கல் செய்து அதனை மீட்டுத் தந்தமைக்கு வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.கைதர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேவை ஒன்றுக்காக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேணிநகர் பகுதியில் காணி ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பொதுத் தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியை நபரொருவர் அத்துமீறி தன்வசப்படுத்தியிருந்தார். அதனை பிரதேச சபை உறுப்பினர், கிராம அபிவிருத்தி சங்கம், பள்ளிவாசல்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இவ்விவகாராம் தொடர்பில் பிரதேச செயலாளர் நீதி மன்றில் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி காணியை மீட்டுள்ளமைக்கு கிராம மக்கள் சார்பாக தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் கைதர் தெரிவித்தார்.
அரச செலவில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காணப்படும் குறித்த காணியில் எதிர் காலத்தில் மத்திய மருந்தகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
