கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் டித்வா கொடுப்பனவு கிடைக்காமை தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளுவை மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவில் டித்வா புயல் அனார்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் பலருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று தளுவையின் விகாராதிபதி தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தளுவை விகாராதிபதி கருத்துத் தெரிவிக்கையில்,
டித்வா புயல் அனர்த்ததினால் தளுவை மற்றும் நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மட்டுமே நிவாரண கொடுப்பனவு 25000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் மேலும் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்படாமல் நீண்ட நாட்களாக அதற்கான வெற்றிடம் காணப்படுவதாகவும், அதன் காரணமாக பதில் கடமைபுரியும் கற்பிட்டி பிரதேச உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ். என். பிரியதர்ஷினி மற்றும் புத்தளம் மாவட்ட அத்தியட்சகர் ஆகியோரிடம் இது பற்றிய முறைப்பாடு முன்வைக்கப்பட்டது எனவும், அதற்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவே தான் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வெயிலையும் பொருட்படுத்தாது தினசரி கூலித் தொழில் செய்யும் மக்களுக்காக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது விடயமாக கற்பிட்டி ஊடகவியலாளர் கற்பிட்டி பிரதேச பதில் கடமை புரியும் உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ்.என். பிரியதர்ஷினியிட ம் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
நிவாரண கொடுப்பனவுகள் ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன் கொடுப்பனவு பெறத் தகுதியற்றவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில் தளுவை, நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் முகமாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுடன் கிராம அனர்த்த குழுவினர் இணைந்து தகுதியானவர்கள் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதாகவும் அக்குழுவினரின் இறுதி அறிக்கை செவ்வாய்க்கிழமை (03) காலையிலேயே கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அந்த அறிக்கையின்படி தளுவை , நிர்மல்புர கிராமத்தில் இன்னும் 30 குடும்பங்களுக்கான 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வியாழக்கிழமை (05) வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
