உள்நாடு

புத்தளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு துருக்கி மக்களால் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வியாழக்கிழமை (26) வழங்கி வைக்கப்பட்டன.

மதுரங்குளி மேசி லங்கா வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த உலர் உணவுப் பொதிகள் துருக்கி நாட்டு மக்களினால் இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்யபப்பட்டதாகும்.

இந்த நிகழ்வில் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. செமி லுட்ஃபு துர்குட் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தார்.

மேர்சி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ. பௌசுல் ரஹ்மான் மற்றும் மேர்சி லங்கா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.முனாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களும், புத்தளம் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுமாக மொத்தமாக 100 குடும்பங்களுக்கு புனித ரமழான் மாதத்திற்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. செமி லுட்ஃபு துர்குட் தெரிவிக்கையில் கூறியதாவது,

இந்த உலர் உணவுப் பொதிகளை நாங்கள் ஒரு உதவி செய்யும் நோக்கத்தில் வழங்கவில்லை.

மாறாக, இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இருநாடுகளில் வாழும் மக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் ஒரு அடையாளமாகவே இந்தப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிப்பதால் துருக்கி மக்கள் மற்றும் நான்கொடையாளர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஒரு அடையாளமாக காணப்படுகின்றன என்றார்.

அத்துடன், புனித ரமழான் மாதத்தில் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கிய துருக்கி அரசுக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. செமி லுட்ஃபு துர்குட் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக மேர்சி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ. பௌசுல் ரஹ்மான் இதன்போது குறிப்பிட்டார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *