உலகம்

ஈரானின் புதிய ஆன்மீக உச்சத் தலைவராக ‘முஜ்தபா கொமெய்னி நியமனம்

ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னியின் இரண்டாவது மகன் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), நாட்டின் புதிய உச்சத்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெஹ்ரானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த கொமெய்னிக்குப் பிறகு ஈரானின் மிக உயரிய அதிகார பீடத்திற்கு யார் வருவார் என்ற நீண்டகால எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தத் தலைமுறை மாற்றமானது ஈரானிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

நிழல் உலக அதிகார மையமாக இருந்த முஜ்தபா
86 வயதான அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து,

56 வயதான முஜ்தபா கமேனியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளமை ஒரு அதிரடியான அதிகார மாற்றமாகக் கருதப்படுகிறது.

இதுவரை அரசாங்கத்தில் எவ்விதமான சிரேஷ்ட பதவிகளையும் உத்தியோகபூர்வமாக மொஜ்தபா வகித்ததில்லை.

எனினும், தனது தந்தையின் ஆலோசகர் என்ற ரீதியில் பல தசாப்தங்களாகத் திரைக்குப் பின்னால் இருந்து அதிகாரத்தை இயக்கி வந்தவர்.

தந்தையின் நெருக்கமான வட்டத்தில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முதல், ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் (IRGC) முக்கிய நியமனங்கள் மற்றும் இரகசியப் புலனாய்வு விவகாரங்கள் வரை அனைத்திலும் முஜ்தபா பாரிய செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார்.

IRGC-உடனான நெருக்கம் மற்றும் கொள்கைகள்
ஈரானின் அதிகாரமிக்க பாதுகாப்பு அமைப்பான புரட்சிகர இராணுவத்துடன் (IRGC) முஜ்தபா கொண்டுள்ள ஆழமான பிணைப்பு, அவரை இந்த உயரிய பதவிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தனது தந்தையின் புரட்சிகரக் கொள்கைகளை எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதரவாக அமைந்தது.

முஜ்தபாவின் தலைமையின் கீழ் ஈரான் தனது கடும்போக்குக் கொள்கைகளையே தொடரும் என்றும், மேற்கத்திய நாடுகளுடனான சமரசங்கள் மேலும் மட்டுப்படுத்தப்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கொமெய்னி வம்சத்தின் ஆதிக்கம்
முஜ்தபாவின் இந்த நியமனம், கொமெய்னி குடும்பத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஈரானின் தேசியக் கொள்கைகள், அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்திய இராணுவ வியூகங்கள் ஆகியவற்றில் புரட்சிகர இராணுவத்தின் (IRGC) பங்கு முன்னெப்போதையும் விட அதிகரிக்கக்கூடும்.

அரசாங்க ரீதியான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், இந்த அறிவிப்பு சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொமெய்னி வம்சத்தின் செல்வாக்கு ஈரானின் அடுத்தக்கட்ட ஆட்சியையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் எவ்வாறு தீர்மானிக்கப்போகிறது என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *