விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் குமார் சங்கக்கார கவலை

நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், அணி வீரர்களும் வேதனையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தனது சமூக ஊடகப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சரியான பாதையில் செல்வதற்கு அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்று சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அதற்கு ஏற்றவாறு மாறவில்லை என்றும், ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர், கோபத்திலும் உள்ளனர். வீரர்களும் மிகவும் காயப்பட்டுள்ளனர். நானும் இவ்வாறு டிரஸ்ஸிங் ரூம்களில் இருந்திருக்கிறேன். இது எளிதானது அல்ல.

ஆனால் இந்தப் பொறுப்பு ஆடுகளத்துடன் வருகிறது. உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு சுமை மற்றும் ஒரு பெரிய பாக்கியமாகும்.

சரியான பாதையில் செல்ல அனைத்து மட்டங்களிலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நம்மைச் சுற்றியுள்ள கிரிக்கெட் உலகம் மிக விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.

எனினும், ​​நாம் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அதை மாற்றியமைத்துக் கொள்ளவில்லை” என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் சுப்பர் 8 சுற்றில் நேற்று மோதின. இதில் நியூசிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்த தோல்வியுடன், இலங்கை அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *