யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எந்த விதத்திலும் சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாதென்பதை அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று கொண்டு ஒன்றிணைந்த திட்டமாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவு செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எந்த ஒரு திட்டத்தினதும் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் போது நிறைவு செய்யப்பட வேண்டிய சில அறிக்கைகள் உள்ளன. சுற்றாடல் ஆய்வு அறிக்கை உள்ளிட்ட பல அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளன.
அந்தப் பிரதேசத்தின் சுற்றாடல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் முன்னெடுக்கும்.
ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வியொன்றை எழுப்பி,
மேற்படி விளையாட்டு மைதானம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருடன் அது தொடர்பாக கலந்துரையாடி,இந்த வருட இறுதியில் இந்த விளையாட்டு மைதானத்தில் முதலாவது விளையாட்டுப் போட்டி நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவ்வாறான சுற்றாடல் அறிக்கையின்றி ஜனாதிபதிக்கு எவ்வாறான உறுதிமொழியை அவர் வழங்கினாரென கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது. விரைவில் அதனை நிறைவு செய்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
எந்த ஒரு அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் போது அது தொடர்பான தரவுகளை நிவர்த்தி செய்து கொள்வது முக்கியமாகும். இதற்கான நடவடிக்கைகள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான எதிர்பார்ப்பையே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.எந்த விதத்திலும் யாழ். சர்வதேச விளையாட்டு மைதானத்தின நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட மாட்டாது. விரைவாக நிறைவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
