சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வூட்லர்
கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு வழிகளில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் துவான் சுரேஷ் சாலே, இன்று காலை 7.50 மணிக்கு பேலியகொட பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுடன் இணைந்து புதிதாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் அதற்குப் பொறுப்பான மற்றவர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு வழிகளில் ஊடகங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
