புர்தா தமாம் மஜ்லிஸ்
வாராந்தம் வெள்ளிக் கிழமை காலையில் பேருவலை சீனன் கோட்டை பாஸிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெறும் புர்தா மஜ்லிஸின் தமாம் நிகழ்வு எதிர்வரும் 15 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகையோடு நடைபெறும்.
கலீபா அஷ்ஷைக் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி)தலைமையில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து புர்தா மஜ்லிஸும், மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து வழீபா, யாகூத்தியா ஹழரா மஜ்லிஸும், ரஇஷாத் தொழுகையைத் தொடர்ந்து முஸாக்கராவும் நடைபெறும்.
மௌலவி அல்ஹாஜ் அல் உஸ்தாத் அம்ஜத் அலி (முப்தி, ஸக்காபி) அவர்கள் முஸாக்கர நிகழ்த்துவார். இம் மஜிலிஸ் 100 வருடங்கலுக்கு மேலாக மேற்படி பள்ளிவாசலில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனை முன்னிற்று இக் கட்டுறை பிரசுரிக்கபடுகிறது.
வான்மறை குர்ஆன் கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க எகிப்து நாட்டில் ‘அல்பூஸிர்’ எனும் நல்லூரில் வாழ்ந்த பெரியார் ஸயீது இப்னு ஹம்மாது என்பவரின் அருமை திருமகனாய் கி.பி. 1211 ஆவது ஆண்டில், ஹிஜ்ரி 608ஆவது ஆண்டில் பிறந்தவர்தான் கஸீதத்துல் புர்தா இயற்றிய கவிஞர் ஷறபுத்தீன் முஹம்மது அல்பூஸிரி ஆவார். இவர் பிறந்த ஊர், ‘அல்பூஸிர்’ என்பதால்,இவரின் பெயருடன் இணைத்து ‘அல்பூஸிரி’ என்றே இவர் அழைக்கப்பட்டார். இவர் எகிப்திலுள்ள புகழ்மிக்க கல்விக் கருவூலமாம் ‘அல்அஸ்ஹர்’ பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுத் தேறினார். அரபி இலக்கண இலக்கியத்திலும் புலமை பெற்றார். கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். இவரின் ஆற்றலை மக்கள் வியந்து பாராட்டிய சூழலில் இவருக்கு ஏற்பட்ட சோதனையாக கண்ணேறால் இவர் பாதிக்கப்பட்டு பக்கவாத நோய்க்கு ஆளானார். அரசுப் பணியிலிருந்த இவர் இந்த நோயினால் ஆறாத துயரடைந்தார். மருத்துவ சிகிச்சைகள் பயனளிக்கவில்லை. உடலின் சரிபாதி இயக்கமற்றிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்தமரவும் இயலாமல் அவதிப்பட்டார். இந்தச் சூழலில் கலங்கியோர்க்குக் கைகொடுக்கும் கருணை நபிகளாரை கருத்தில் பதித்து அவர்களின் ஆசியினை யாசித்து அகமுருகிப் பாடிய அரிய காவியம் தான் ‘கஸீதத்துல் புர்தா ‘ஆகும்.
நோய்வாய்ப் படுக்கையில் இந்தப் பாமாலையின் 163 கண்ணிகளையும் பாடி முடித்தபின் கவிஞர் பூஸிரி கண்ணயர்ந்தார். கனவிலே கருணை வடிவான காத்தமுந்நபி (ஸல்) அவர்கள் காட்சி நல்கி கலங்கிய கவிஞரைப் பார்த்து, அக்கவிதையை பாடிக்காட்டப் பணித்தார்கள். பூமான் நபிகளைக் கண்டு பூரிப்படைந்த கவிஞர் பூஸிரி பொங்கி வந்த பிரவாகமாய் தாம் பாடிய கவிதையைப் பெருமானார் முன்னில் பாடிக் காட்டினார்கள். கவிஞர் கவிதைப் பாட கருணை நபிகளார் அதை சுவைத்து மகிழ்ந்து தம் பொன்னாடையைக் கவிஞருக்குப் போர்த்தினார்கள். அத்துடன் தன் தங்கக் கரங்களை கவிஞர் மேனியில் தடவினார்கள். கவிஞரோ புதுப்பொலிவோடு புத்துணர்வு பெற்று எழுந்தார்.
அன்று காலை அவர் நலம் பெற்று சுபுஹுத் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றபோது வழியில் அவர்களை சந்தித்த பெரியவர் கவிஞரிடம், ‘பெருமானாரிடம் நீர் ஓதிக்காட்டிய கவிதையை நான் படித்து மனனமிட எனக்குத் தாருங்கள்’ எனக் கேட்டார். அதற்குக் கவிஞர் அவரை நோக்கி, ‘நான் நபிகளாரைப் புகழ்ந்து பல கவிதைகள் பாடியுள்ளேன். இவற்றில் எதைக் கேட்கிறீர்’ என்றார். அதற்கு அவர், ‘அமின் ததக்குரி ‘ எனத் தொடங்கும் கவிதை என்றபோது – வியந்துபோன கவிஞர் பூஸிரி அந்தப் பெரியவரை நோக்கி, ‘அந்தக் கவிதை குறித்து உங்களுக்கு எப்படித் தெரியும். அதை நான் எவரிடமும் வெளியிடவில்லையே என்றார். அதற்கு அப்பெரியவர், நீர் அந்தக் கவிதையை நபிகளாரிடம் கனவில் படித்துக் காட்டியபோது நானும் பக்கத்தில் இருந்தேன் என்றார். பின்னர், அக்கவிதையை பெரியவரிடம் கவிஞர் ஒப்படைத்தார்.இதனால் கவிஞர் கருணை நபிகளாரிடம் இந்தக் கவிதையை ஓதிக் காட்டிய செய்தி மக்களிடையே பரவியது.
அன்றைய எகிப்து மன்னர் தாஹிர் என்பவரின் அமைச்சர் பஹாவுத்தீன் என்பவர் கவிஞரிடமிருந்து இக்கவிதையை வாங்கிப்,பிரதி எடுத்து பெரும் பேணுதலாக ஓதி வந்தார். இந்நிலையில் ஒருநாள் மன்னர் தாஹிருக்கு கண்வலி ஏற்பட்டு கண்பார்வை இழக்கும் நிலை நெருங்கியது. அப்போது ஒரு பெரியவர் மன்னரின் கனவில் தோன்றி உமது அமைச்சரிடம் புர்தா எனும் ஒரு கவிதை இருக்கிறது. அதை வாங்கி உமது இரு கண்களிலும் ஒத்திக் கொள்ளுங்கள் என்றார். இந்தக் கனவை அரசர் தன் அமைச்சரிடம் கூறினார். அப்போது அமைச்சர் அரசரை நோக்கி என்னிடம் நபிகளாரின் புகழ்பாடும் ஒரு கவிதையைத் தவிர வேறு எதுவும் இல்லை. எல்லாப் பிணிகளையும் அகற்றிட இந்தக் கவிதையை நாங்கள் வஸீலா ஆக்குகிறோம் எனக் கூறி புர்தாவை அவர் கையில் கொடுத்தார். அரசர் அதை வாங்கி தன் கண்களில் ஒத்திக் கொண்டு அதை ஓதிக் காட்ட உத்தரவிட்டார். உடனே புர்தா ஓதப்பட்டது.அக்கணமே அரசரின் கண்வலி பூரண குணம் பெற்றது. இந்தக் காரணத்தினால் இந்தக் கவிதைக்கு புர்தா என்றே பெயர் வைக்கப்பட்டது.
‘புர்தா’ என்ற சொல்லுக்கு ‘போர்வை’ என்று பொருள் ‘புர்உத்தாஃ என்ற சொல்லுக்கு நோய் நிவாரணி என்று பொருள். இவ்விரு பெயர்களும் இந்நூலுக்கு பொருத்தமே. பூமான் நபிகளார் போர்த்தியதால் இது போர்வையாகவும், கவிஞர் பூஸிரியார்க்கும், மன்னர் தாஹிருக்கும் பிணியகற்றியதால் இது நோய் நிவாரணியாகவும் துலங்குகிறது.
‘இஸ்பஹான்’ நகரில் வாழ்ந்த ‘ஹாரூன் அல் அர்கம்’ என்ற பெரியார், அண்ணல் நபிகளாரை கனவில் கண்டு தன் நிலைமையையும், வறுமையையும் முறையிட்டார். அதற்கு நபியவர்கள் என் மீது முஹம்மத் இப்னு ஸயீத் அல்பூஸிரி என்பவர் இயற்றிய கவிதையை வாங்கி வழக்கமாக தினமும் ஓதி வாருங்கள் என்றார்கள். இதற்கிணங்க ஹாரூன் அல் அர்கம் இதை ஓதிவர – அவரின் சிக்கல்கள் நீங்கின, பிணிகள் அகன்றன,நாட்டங்கள் நிறைவேறின, அபிவிருத்திகள் மிகுந்தன, ஆனந்தம் பெருகின.
உன்னத புர்தா ஓதும் ஒழுங்கு முறைகள்
- புனித புர்தாவை, ஒலுவுடன் ஓதவேண்டும்.
- ஓதுகிற சபையை பூக்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, அத்தர், சந்தனம் போன்ற நறுமணம் கமழும் பொருட்களால் மணம் பரப்பச் செய்ய வேண்டும்.
- இரண்டு ரக்அத் ‘இஸ்திகாறா’ தொழுத பின் -புர்தா ஓதத் தொடங்க வேண்டும்.
- கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து ஓத வேண்டும்.
- அத்தஹிய்யாத்து’ அமைப்பில் அமர்ந்து ஓதவேண்டும்.
6.பத்து முறையோ, ஏழு முறையோ பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி, புர்தா ஓதத் தொடங்க வேண்டும்.
- லகத் ஜாஅகும் றசூலுன்’ எனத் தொடங்கும் திருவசனத்துடன் சூறத்துல் ஃபாத்திஹா மற்றும் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதிய பின் புர்தா ஓத வேண்டும்.
- உடல் தூய்மையைப் போல் உள்ளமும் களங்கமற்ற தூய எண்ணத்தைப் பெற்றவண்ணம் ஓத வேண்டும்.
- இரண்டு ‘மீம்’ களில் முடியும் பைத்தை ஓதிய பின் ‘மவ்லாய ஸல்லி வஸல்லிம் பைத்தை ஓத வேண்டும்.
- ஓதவதற்கு மத்தியில் தேவையின்றி பேசவோ சிரிக்கவோ கூடாது.
(பேருவலை பீ.எம்.முக்தார்)
