உலகம்

பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அமோக வெற்றி பெற்றது பி.என்.பி கட்சி

பங்களாதேஷில் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), நேற்று (12) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியுள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். 

இதனால் நோபல் பரிசு பெற்ற மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 

சுமார் 18 மாதத்துக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் பங்காளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. 

வங்கதேச பாராளுமன்றில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. 

இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர். 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

தொடக்கத்தில் பி.என்.பி. கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 

அதன்பின் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. 

211 தொகுதிகளை கைப்பற்றிய பி.என்.பி. கட்சி தேர்தலில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

இதனால் அந்த நாட்டின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் பதிவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *