உள்நாடு

International Diplomats அமைப்பின் நான்காவது மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (MUN) மாநாடு கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

இன்டர்நேஷனல் டிப்ளோமட்ஸ் (International Diplomats) அமைப்பின் நான்காவது மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (MUN) மாநாடு 2026 பிப்ரவரி 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் இலங்கை மற்றும் 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். “

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சமாதானம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாடு, கட்டமைக்கப்பட்ட மாதிரி ஐக்கிய நாடுகளின் குழு முறைமையில் ராஜதந்திரம், உலகளாவிய கொள்கை ரீதியான உரையாடல் மற்றும் பொறுப்பான AI ஆளுமைக்கான உயர் மட்ட தளத்தை வழங்கியது.

இலங்கையின் முன்னாள் நீதி, நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாநாட்டின் முதலாம் நாள் இராஜதந்திர இரவை ( Diplomatic Night) சிறப்பித்தார்.

இலங்கைக்கான நேபாள தூதர் கௌரவ டாக்டர் பூர்ணா பகதூர் நேபாளி சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

மேலும், UNV இலங்கை நாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி சர்மாலி ஜெயசிங்க சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருந்தினர்களாக இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் மேன்மைமிகு தேவி குஸ்டினா டோபிங், இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் ஆலோசகரும் துணைத் தலைவருமான திரு. இவான் ராட்ஜென்ஸ் மற்றும் இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. ஆலிவர் பிராஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளர் திரு. என். எம். அமீன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய அதிதிகள் கலந்து கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவு (AI), அமைதி கட்டமைத்தல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்த கருப்பொருள் இராஜதந்திர குழு விவாதமும் நடத்தப்பட்டது.
 
இரண்டாவது நாளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை குழு அமர்வுகளும் முறையான இராஜதந்திர செயற்பாடுகளும் இடம்பெற்றன.

மூன்றாவது நாளில், சர்வதேச பிரதிநிதிகள் இலங்கை பாராளுமன்றத்தை கண்டறிந்தது மட்டுமின்றி கொழும்பு நகர சுற்றுப்பயணத்திலும் இணைந்தனர்.

சுற்றுப்பயணம் முழுவதும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மேலும், பார்வையிட்ட ஒவ்வொரு இடத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்டர்நேஷனல் டிப்ளோமட்ஸ் அமைப்பு 2023 இல் நிறுவப்பட்டது. அதன் முதல் மாநாடு இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் கோவா மற்றும் தாய்லாந்தின் பாங்காக்கில் மாநாடுகள் நடைபெற்றன. இந்த அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாடு 2026 மே மாதத்தில் துபாயில் நடைபெற உள்ளது.

இன்டர்நேஷனல் டிப்ளோமட்ஸ் அமைப்பானது திரு. சல்மான் காசி தி டிராப்ஸி (The Dropsy) நிறுவனத்தின் தலைவரால் நிறுவப்பட்டது.

இவர் இவ்வமைப்பின் ஸ்தாபகராகவும் இயக்குனராகவும் செயல்படுகிறார். மேலும் இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் திரு. அஹ்மத் சாதிக் இவ் அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.

அத்தோட மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு ,பொதுச் செயலாளரும் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான திரு. சமக சமரக்கோனால் இயக்கப்பட்டது.

மேலும் அனைத்து விதமான ஒருங்கிணைப்பு செயல்பாடுகள்,இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் இவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரு. முப்தி முயீனால் கையாளப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் ஐந்தாவது சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு துபாயில் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *