தேசிய ஷூரா சபையின் வரி மற்றும் சுங்கத் துறை சார் விழிப்புணர்வு கருத்தரங்கு
தேசிய ஷூரா சபையின் (NSC) சமூக-பொருளாதார உபகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை வர்த்தகர்களுக்கான வர்த்தக வசதி மற்றும் ஊக்குவிப்பு கருவிகள் – 2026” எனும் மகுடத்திலான நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) கொழும்பு தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசிய ஷூரா சபையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜனாப் M.M. ஸுஹைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். தேசிய ஷூரா சபையின் சமூக-பொருளாதார உபகுழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் A.L. ஹக்கீம் மொஹமட் தனது வரவேற்புரையில் இக்கருத்தரங்கின் பிரதான நோக்கம் மற்றும் அது முன்னெடுக்கும் வழிமுறைகள் குறித்துத அறிமுகத்தை வழங்கினார்.
பிரபல தொழிலதிபரும், சமூகசேவையாளரும் வீல்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ் T.L.M. நவாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுமார் 80-க்கும் மேற்பட்ட முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதார சூழலில் வர்த்தக சமூகத்திற்குப் பெரும் பயனுள்ளதாக அமைந்த இந்நிகழ்வு, வரி மற்றும் சுங்கத் துறைகள் சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தெளிவான மற்றும் நடைமுறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கியது.
இந்நிகழ்வில்,
“சர்ச்சைக்குரிய வரியும், அதிலிருந்து வெளியேறும் வழிகளும்” என்ற
தலைப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் அஷ்ஷைக் என். எம். எம். மிப்லி (நளீமி) உரையாற்றினார்.
அவரது உரையில்,
வரி தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும் எவ்வாறு வரி செலுத்துநர்களின் உரிமைகளை முதன்மைப்படுத்துகின்றன என்பதும்,
வரி அதிகாரிகள் இவ்வுரிமைகளை மீறும் சந்தர்ப்பங்களில்—வரி செலுத்த வேண்டிய பொறுப்பு தெளிவாக இருந்தாலும் அத்தகைய வரி மதிப்பீடுகள் எவ்வாறு சட்டவிரோதமானவையாக மாறுகின்றன என்பதும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும்,
காரணங்களை விளக்காமல் வரி விதித்தல்,
சட்டம் நிர்ணயித்த கால எல்லைகளை(Time Bar) மீறுதல், உரிய சட்ட விதிகளை மேற்கோள் காட்டத் தவறுதல் போன்ற பொதுவான வரி செலுத்துநர் உரிமை மீறல்கள் குறித்தும், மேல்முறையீட்டு (Appeal) நடைமுறைகள் மூலம்
இவ்வாறான சட்டவிரோத வரி மதிப்பீடுகளை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதையும் அவர் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து,
“சுங்கத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளும் போது அவசியமாக அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்” என்ற தலைப்பில் சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் அஷ்ஷைக் எம்.ஏ.எம்.நாஸிர் (நளீமி) உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
வெளிநாட்டுப் பயணம், வர்த்தகம்,
ஏற்றுமதி–இறக்குமதி நடவடிக்கைகள்,
பிணைப்படுத்தல் (Bonding) செயல்முறைகள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில்
சுங்கத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படக்கூடிய தாமதங்கள், அபராதங்கள் மற்றும் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ நடைமுறைகள் குறித்து தெளிவாக விளக்கினார்.
இந்நிகழ்வு “உண்மையான பாதுகாப்பு அறிவில் தான் உள்ளது.”
என்ற அடிப்படைக் கருத்தை முன்வைத்ததுடன்
வரி செலுத்துநர்களின் உரிமைகள் மற்றும் அரசு அதிகாரிகளின் சட்டபூர்வ கடமைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதியது.
இந்த நிகழ்வில்,
சட்டத் துறையினர், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டனர்.
தேசிய ஷூரா சபையின் முன்னாள் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதியுமான அஷ்-ஷெய்க் S.H.M. ஃபளீல் , தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள், அதன் கட்டமைப்பு, தூரநோக்குச் சிந்தனைகள் மற்றும் சமூகப் பணிகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வின் முக்கிய அங்கமாக இடம்பெற்ற குழுக்கலந்துரையாடலை பிரபல தொழிலதிபரும், ஐகிங் ஹோல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜனாப் இஹ்சான் வாஹித் திறம்பட நெறிப்படுத்தஸ இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜனாப் M.M. ஸுஹைர், அஷ்-ஷெய்க் N.M.M. மிஃப்லி, அஷ்-ஷெய்க் M.A.M. நாஸிர் ஆகியோருடன் சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான ஜனாப் அக்தர் ஹஸன் அவர்களும் இணைந்து கொண்டனர். இவர்கள் சபையோரிடமிருந்து எழுந்த கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களையும், சந்தேகங்களுக்கானூ தீர்வுகளையும் வழங்கினர்.
நிகழ்வின் நிறைவாக, தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ஜனாப் ரஷீத் M. இம்தியாஸ் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வை தேசிய ஷூரா சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அஷ்-ஏஷெய்க் M. அப்துல்லாஹ் தொகுத்து வழங்கியமை குறிப்பிட்டத்தக்கது.






