பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, இந்தியாத இணைந்து நடத்தும் 2026 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.
போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பாகிஸ்தான் அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் பேரவை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் சபை தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
இறுதியில் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி திட்டமிட்டப்படி இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார்.
1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சரும் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
