தேசிய மக்கள் சக்தி அமைச்சரவையில்முஸ்லிம் இல்லாமை கவலையளிக்கிறது

- பாராளுமன்றத்தில் உதுமா லெப்பை எம்.பி
முஸ்லிம் சமூகத்தினை பழிவாங்கும் நோக்குடன் இனவாத ஆட்சியை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட போதிலும் கடந்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களில் முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை பெரிதும் கவலை அளிக்கின்றது என்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் சமூகத்தினை பழிவாங்கும் நோக்குடன் கொரோனா நோயினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்தார். ஆனால் அவருடைய இனவாத ஆட்சியில் கூட அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முக்கியமான அமைச்சுக்களான வெளிநாட்டு அமைச்சு, நீதி அமைச்சு வழங்கப்பட்டன.
ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல்களில் முஸ்லிம் சமூகம் தேசிய மக்கள் சக்தி தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவுக்கும் அவர் தலைமையிலான ஆளும் கட்சிக்கும் அதிகப்படியான வாக்குகளை அள்ளி வழங்கியும் இதுவரையும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒருவர் கூட அமைச்சரவைக்கு சேர்த்துக் கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது. இது கவலைக்கும் வேதனைக்கும் உரிய விடயம். பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் கூட நான்கு முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.
சுதந்திரத்திற்கு பின்வந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மறைக்க முடியாத வரலாறு. அப்படியிருக்கையில் தேசிய மக்கள் சக்தி மாத்திரம் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமையாவது உள்வாங்காதிருக்கிறது. இந்த அரசாங்கம் ஒரு முஸ்லிமையாவது அமைச்சரவையில் உள்வாங்கும் வரை அதற்காகக் குரல் கொடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நமது நாட்டில் சத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக கட்சியாகும். ஜனநாயக ரீதியில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியினர் மேற்கொள்ளும் நல்ல விடயங்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்கி வருகிறோம். நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான குரலாகவும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனை ஆளும் கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு அமோகமாக வாக்களித்தார்கள் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.
ஜித்தாவுக்கான கொன்சியூலர் ஜெனரலாக வழமைக்கு மாறாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சியினராகிய நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் மறுபரிசீலனை செய்து முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். இது வரவேற்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் 16,100 ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு 05 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம் தொடர்பில் பல வாக்குறுதிகள் வழங்கியதாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் அமைந்துள்ள பாடசாலைகளில் 43,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற சூழலில் எமது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக 5000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. “சனசவிய” திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இந்த மாதம் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விசேட ஏற்பாடுகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும். ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவும் வேண்டும் என்று எமது மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலத்தில் கல்வி அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேம ஜயந்த பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேர்முக பரீட்சை என்பதன் ஊடாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதாக ஏற்பாடுகளை முன்னெடுத்து இருந்தார். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின் தென் மாகாணத்தில் போட்டிப் பரீட்சையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, பாடசாலைகளில் இணைக்கப்பட்ட ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை நியமனங்களை வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகளை அரசாங்கமும் கல்வி அமைச்சும் மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
